தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எமது அடுத்த சந்ததியும் போராடும்!

protest-2

எங்களுடைய வரலாறு என்பது சிங்களப் பேரினவாதிகளால் தாக்கப்பட்டநாட்களால் அழிக்கப்பட்ட நாட்களால் நிரம்பியிருக்கிறது. வரலாறு முழுவதும் சிங்களப் பேரினவாதிகள் நிகழ்த்திய வன்முறை காரணமாக இந்த நாட்டில் பாரிய அரசியல் விளைவுகள் ஏற்பட்டன. அதனால்தான் தமிழ் ஈழ மக்கள் பிரந்து செல்லும் போராட்டத்தை தொடங்கினார்கள். தமிழ் ஈழ மக்கள்மீது இவ்வளவு வன்முறைகளையும் நிகழ்த்தி அவர்களை அழித்த பின்னரும் சிங்களப் பேரினவாத உணர்வு அழிவின்றி கொளுத்துக் கிடக்கிறது.

இதற்கு எடுத்துக் காட்டுத்தான் கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடந்த சம்பவம். மே 18 இனப்படுகொலை நினைவு நாளின்போது நினைவேந்தல் செய்த கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவன் ஒருவன் அதனை படம் பிடித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த சிங்கள மாணவர்கள் அந்த மாணவன்மீது கடுமையான இனவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த அந்த தமிழ் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இந்த நிலையில் இந்த இனவெறிச் செயலை கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொல்லப்பட்ட தமிழ் உறவுகளை நினைவு கூர்வது எமது உரிமை என்றும் அழிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வது எமது உரிமை என்றும் மாணவர்கள் உக்கிரமான குரலில் இனவெறிச்செயலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களை மாத்திரமின்றி அனைத்து தமிழ் மாணவர்களையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

தமிீழ விடுதலைப் போராட்டங்களின் தொடக்க இடங்களாக பாடசாலைகளும் பள்ளிகளுமே இருந்தன. காரணம் அங்குதான் தமிழ் இனத்திற்கும் தமிழ் மாணவர் சமூகத்திற்கும் எதிரான அநீதிகள் கூர்மைப்படுத்தப்பட்டன. அதனால் அவைகளை கண்டு கொந்தளித்து போராட்டத்தை தமிழ் மாணவர்கள் கையில் எடுத்தார்கள். எனவே வரலாற்றில் இருந்து பாடங்களை கற்ற சிங்கள மாணவர் சமூகம் தயாரில்லை என்பதும் மீண்டும் தொடக்க இடத்திற்கு செல்லவே விரும்புகின்றனர் என்பதும் புலப்படுகிறது.

நாம் இந்த இடத்தில் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள இயலும். சிங்கள தேசத்தின் அடுத்த தலைமுறையும் பேரினவாத வெறியை கையில் எடுக்கும்போது அதற்கு எதிரான போராட்டத்தை ஈழ தேசத்தின் அடுத்த தலைமுறையும் கையில் எடுக்கும் என்பதே அந்த விடயம். இதனையே தலைவர் பிரபாகரன் எனது அடுத்த சந்ததியும் என்னைவிட உக்கிரமாக போராடும் என்று அன்றே சரித்திரத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்.

குறிப்பாக தமிழ் மாணவர் சமூகத்தை ஸ்ரீலங்கா அரசும், சிங்கள இராணுவப் படைகளும் தொடர்ந்தும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். கடந்த காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களை ஸ்ரீலங்கா அரசு படுகொலை செய்தது. கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரை காணாமல் போகச் செய்தது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு புனர்வாழ்வு என்ற சித்திரவதை முகாம் வாழ்க்கையை பரிசளித்தது. மாணவர்கள்மீது கடுமையான வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டது. இவ்வாறு சிங்கள அரசும் படைகளும் மேற்கொள்ளும் வன்முறைதான் சிங்கள மாணவர்களையும் தூண்டியுள்ளது.

இதில் இன்னொரு விடயத்தையும் கருத்தில் எடுக்கவேண்டும். அதாவது தமிழ் பிரதேசத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் சிங்கள மாணவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால் சிங்கள தேசத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் எங்கள் மாணவர்கள் எவ்வளவு ஒடுக்குமுறையை சந்தித்து கல்வி கற்பார்கள்? தம் இன உணர்வை, மொழி உணர்வை, இன அழிப்புக்கு எதிரான கொந்தளிப்பை வெளிப்படுத்த முடியாத அடக்குமுறை சூழலில் அவர்கள் கல்வி கற்கிறார்கள்.

அத்துடன் இன்னொரு விடயத்தையும் செண்பகத்தின் பத்தி, சுட்டிக்காட்ட விரும்புகிறது. படித்த பல்கலைக் கழக சிங்கள மாணவர் சமூகமே இப்படி செய்கிறது என்றால் ஏனையவர்கள் எத்தகைய இனவெறியுடன் இருப்பார்கள்? ஸ்ரீலங்காவில் ஆட்சி மாறியுள்ளதே தவிர, அங்கே பேரினவாத வெறி வீழவில்லை என்பதையே இந்த சம்பவங்கள் காட்டுகின்றன. சிங்களப் பேரினவாத வெறி தமிழ் மக்கள்மீது வன்முறை வெறியுடன்தான் எப்போதும் இருக்கிறது.

எனவே சிங்கள மாணவர்கள் இத்தகைய இனவாத வெறியை வெளிப்படுத்தினால் அதற்கு எதிராக தமிழ் மாணவர்கள் கிளர்ந்தெழுவது தவிர்க்க இயலாதது. இறந்தவர்களை நினைவுகூர்வதைக்கூட சகித்துள்கொள்ள முடியாதளவில்வளர்க்கப்படும் பேரினவாத வெறி இணைந்து கல்விகற்க முடியாத இந்தப் பேரினவாத வெறிதான் இந்த நாட்டில் தமிழர்களும் சிங்களவர்களும் இணைந்து வாழ முடியாது என்ற யதார்த்தத்தை கட்டியம் கூறுகிறது.

ஆசிரியர்,
செண்பகம்.
27.05.2016

Comments
Loading...