Designed by Iniyas LTD
எரிக்சொல்ஹெய்ம் – ரணில் திடீர் சந்திப்பு
உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்ஸர்லாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஸ்ரீலங்காவிற்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவராக பணியாற்றிய எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
உலகின் முக்கிய தலைவர்கள் பலரும் பெரும் முதலாளிகளும் பல்தேசிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொள்ளும் பொருளாதார மாநாடு டவோஸ் நகரில் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீலங்கா பிரமதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அடங்கிய உயர்மட்டக் குழுவினர் இதில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வின் ஒருபகுதியாக மாற்றத்துக்கு உட்பட்டுவரும் பிராந்தியம் – தெற்காசியா என்ற தலைப்பில் குழுக்கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலின் பின்னரே இவ்விருவருக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் இந்த சந்திப்பின்போது பேசிக்கொண்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடர்பில் இதன்போது ரணில் விக்கரமசிங்கவினால் தெளிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சு நடத்தப்படும் என்றும் பிரதமர் ரணில் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தனது அனுபவங்களின்படி ஸ்ரீலங்காவிற்கு உதவிகளை வழங்க எப்போதும் தயாரான இருப்பதாக எரிக் சொல்ஹெய்ம் உறுதியளித்துள்ளார் என்று அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.