Designed by Iniyas LTD
எரிவாயு திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பை அறிக்கையாக தர உத்தரவு
கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பை அறிக்கையாக வரும் 4ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம், கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக, கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு குழாய்கள் அமைத்து, எரிவாயு கொண்டு செல்லும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 
இதற்காக, தமிழகத்தில், ஏழு மாவட்டங்களில், நில ஆர்ஜித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்துக்காக, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கு, உச்ச நீதிமன்றம் வரை சென்றது. திட்டத்தை அமல்படுத்தவும், ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு கூடுதலாக, 30 சதவீதம் வரை இழப்பீடு வழங்கவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு உரிய பணத்தை வழங்க வேண்டும் என, முத்தரசி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கெயில் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தமிழக அரசு இன்னும் நிலங்களுக்கான இழப்பீட்டை நிர்ணயிக்கவில்லை எனத் தெரிவித்தார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் சுப்பிரமணியன், இதுசம்பந்தமான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு அவகாசம் கோரினார்.
இதையடுத்து, கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டை நிர்ணயிக்க, அந்நிலங்களின் சந்தை மதிப்பு மற்றும் அரசின் வழிகாட்டு மதிப்பை நிர்ணயித்து நவம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.