தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எல்லோருக்கும் பிடிக்கும் ஆம் ஆத்மி கட்சி

ஆம் ஆத்மி– இதற்கு அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ… ஆனால் பலருக்கு இந்த கட்சியை புடிச்சிருக்கு..! அரசியல் ஒரு சாக்கடை. அதில் இறங்க வேண்டாம் என்ற தனது குருநாதர் அன்னாஹசாரேவின் எச்சரிக்கையையும் மீறி சாக்கடையில் இறங்கி சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை என்று களம் இறங்கினார் கெஜ்ரிவால்.

தலையில் காந்தி குல்லா… தோளில் சோல்னா பையுடன் தெருவில் இறங்கி நடந்ததால் மக்களை கவர்ந்தார். டெல்லி வாசிகளுக்கு இது புதுமை. அரசியல்வாதிகள் இப்படி எளிமையாக இருப்பார்கள் என்பதை கனவிலும் கூட பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.

தலைநகரில்தான் அத்தனை தலைவர்களும் வாசம் செய்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர், மந்திரிகள், கட்சி தலைவர்கள் என்று எல்லோரும் அவர்கள் கண்முன்னால்தான் சென்று கொண்டிருக்கிறார்கள். எட்டி கூட பார்க்க முடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்குள் தான் அவர்கள் வலம் வருகிறார்கள். அவர்கள் மத்தியில் கெஜ்ரிவாலின் பிரவேசம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டது.

இப்படிப்பட்டவர்தான் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். அவரால்தான் சாமான்யர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க முடியும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால்தான் கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்து டெல்லி மாநிலத்தில் 28 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றியது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீடுகளுக்கு தினமும் 700 லிட்டர் இலவச குடிநீர்… மின் கட்டணம் பாதியாக குறைக்கப்படும்… மந்திரிகள் யாரும் அரசு கார்களை பயன்படுத்த மாட்டார்கள்… எந்த துறையிலும் ஊழலை அனுமதிக்க மாட்டோம்… என்ற கெஜ்ரிவாலின் கோஷம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

32 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜனதா என்ன நடக்கிறது பார்ப்போமே என்று ஆட்சி அமைக்காமல் ஒதுங்கி கொண்டன. கெஜ்ரிவால் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். பொறுப்பு கைக்கு வந்து விட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடலாம் என்று கனவு கண்டார் கெஜ்ரிவால்.

ஒரு நேர்மையான ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக இருந்து அரசு துறையை சாமர்த்தியமாக வழிநடத்தி வந்தவர். ஆனால் அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டது. அங்கு போய் அமர்ந்த பிறகுதான் முன்னே போனால் கடிக்கும், பின்னே போனால் உதைக்கும் என்பது அவருக்கும் புரிந்து இருக்கும்.

டெல்லி மற்ற மாநிலங்களை போல் இல்லை. நம்ம ஊர் பாணியில் சொன்னால் கிட்டதட்ட ஒரு மாநகராட்சி போன்றது. அவ்வளவுதான். மத்திய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் இருக்கிறது. நிதி, போலீஸ் எல்லாமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

அதனால் அவரால் நினைத்ததை சாதிக்க முடிய வில்லை. ஒரு பாலியல் புகார் தொடர்பாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்க முதல் –மந்திரி பொறுப்பில் இருந்து கெஜ்ரிவால் உத்தர விட்டு பார்த்தார். பலன் இல்லாததால் அவரே ரோட்டுக்கு வந்து போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி இருந்தும் அவரால் சாதிக்க முடியவில்லை. போராட்டம் நடத்தியதற்காக அவரது மந்திரிசபை சகா மீதே வழக்கு பாய்ந்ததுதான் மிச்சம்.

அரசியல் சதுரங்கத்தில் எந்தப் பக்கம் நகர்ந்தாலும் ‘செக்’கை சந்தித்த கெஜ்ரிவால் இறுதியில் தனது கனவு திட்டமான வலுவான ஜன்லோக்பால் மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்தார். அதற்கு அவரது கூட்டணியில் இருந்த காங்கிரசும் கைகொடுக்க வில்லை. எதிர்கட்சியான பா.ஜனதாவும் ஒத்துழைக்க வில்லை. இதனால் 48 நாளில் கெஜ்ரிவால் ஆட்சியை இழந்தார்.

ஆம் ஆத்மியின் அசுர வேக வளர்ச்சியும் அதே வேகத்தில் சந்தித்த வீழ்ச்சியும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் கையில் எடுத்துள்ள லட்சியத்தையும், கொள்கையையும் விடுவதாக இல்லை கெஜ்ரிவால். வெறும் 5 எம்.பி.க்கள் போதும் பாராளுமன்றத்தையே கலக்கி காட்டுகிறேன் என்ற சபதத்தோடு புறப்பட்டு இருக்கிறார்.

இந்தியா முழுவதும் 23–ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். 350 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். முதற்கட்டமாக 20 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அவரது மந்திரி சபை சகாக்கள் அனைவரையும் இந்த தேர்தலில் களம் இறக்குகிறார்.

ராகுல்காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் குமார் விஸ்வாஸ் நிறுத்தப்படுகிறார். நாக்பூர் தொகுதியில் பா.ஜனதா முன்னாள் தலைவர் நிதின் கட்கரியை எதிர்த்து அஞ்சலிதமானியா போட்டியிடுகிறார். டெல்லி சாந்தினி சவுக் தொகுதியில் மத்திய மந்திரி கபில்சிபலை எதிர்த்து அசுதோஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

டெல்லி மீது முழு கவனம் செலுத்தினாலும் உ.பி., மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கூடுதல் கவனம் செலுத்துகிறது. 30 முதல் 40 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பது இவர்கள் இலக்கு.ஜேச்ஜிரிவால்

வெற்றி வாய்ப்பு இல்லாத காங்கிரஸ் மோடி அலையை கட்டுப்படுத்த வகுத்துள்ள வியூகம் தான் பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மியை முடுக்கிவிட்டுள்ளது என்பது பா.ஜனதாவின் குற்றச்சாட்டு.

வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி பற்றி 3 முறை கடிதம் எழுதி விளக்கம் கேட்டும் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. நெளிவு சுளிவுடன் நடப்பது அரசியல்! இதில் கெஜ்ரிவால் தாக்கு பிடித்து பாராளுமன்ற தேர்தலில் ஜொலிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Comments
Loading...