தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐக்கியமாக வாழ தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டுமாம்!

நாங்கள் அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு தமிழ் மக்கள் தமது ஒத்துழைப்புக்களைத் தரவேண்டும்  என ஸ்ரீலங்கா அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 800 பயனாளிகளுக்கான வீட்டுக் கடன் திட்டம் வழங்கும் நிகழ்வு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
sajith-premadasa-720x480”நான் யாழ்ப்பாணத்திற்கு வரும்போது இந்த வீதியின் இரு மருங்கிலும் மக்களின் வாழ்க்கைத்தரத்தினை பார்த்துக்கொண்டு வந்தேன். இந்த நல்லாட்சி அரசில் அடுத்து வரும் ஐந்து ஆறு வருடங்களில், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பாடுபடுவேன்.
இந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலர் பிரிவுகளில், 435 கிராம சேவையாளர் பிரிவில் ஆயிரத்து 406 கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஒவ்வொரு கிராமங்களிலும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வழிகாட்டலில் வீடமைப்பு குழுக்களை அமைக்கவுள்ளோம்.
இந்த வீடமைப்பு குழுக்கள் ஊடாக, அனைவருக்கும் இல்லம் வழங்கும் செயற்திட்டம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.
எனது தந்தையாரால் எண்பத்திமூன்று வீடமைப்பு திட்டங்கள் யாழில் நிறுவப்பட்டன. எமது ஆட்சியில் அதனையும் கடந்து இதற்கு அதிகமான வீடமைப்புத் திட்டங்களை நிறுவி வழங்கவுள்ளோம் என்பதனை உறுதியுடன் கூறுகின்றோம். நூறு ஏக்கர் அரச காணியை இனங்காணுங்கள். அந்த அரச காணியில் 625 வீடுகள் அமைத்து யாழ்.மக்களுக்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என, யாழ்.மாவட்ட அரச அதிபரிடம் கூறியுள்ளோம்.
இந்த நேரத்தில் அமைச்சர் விஜயகலாவிற்கும் ஒரு ஆலோசனையை வழங்குகின்றேன். நீங்கள் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிற்கும் சென்று மக்கள் தேவைகளை இனங்கண்டு, அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட முகாமையாளர் ஆகியோரிடம் கலந்துரையாடி மக்களுடைய வீட்டு தேவைகளை எம்மிடம் முன்வையுங்கள். இந்த மக்கள் அனைவருடைய வீட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்து கொள்கின்றேன்.
கடந்த 2015ஆம் ஆண்டு 8ஆம் திகதி, பாழடைந்த சீர்குலைந்த ஒரு தேசமே எங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் முழுமையாக இந்த நாட்டை சீரழித்துத்தான் கைவிட்டு சென்றார்கள். மக்கள் இன ரீதியாக, மத ரீதியாக, மொழி ரீதியாக பிளவு பட்டிருந்தார்கள். ஆனால் இன்று அவ்வாறல்ல, இன மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இன்று ஒரே குடையின் கீழ் திரண்டு இருக்கின்றோம். எனவே இந்த நல்லாட்சியை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று கருதுகின்றோம். எனினும் சிலர் உங்கள் மனங்களில் நச்சு விதைகளை விதைக்கக் கூடும். அந்த நச்சு விதைகளை விதித்ததன் பயனாகத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாக பேரனர்த்தத்தையும் பேரழிவையும் சந்தித்திருந்தோம்.
எனவே தயவு செய்து நாங்கள் அனைவரும் ஒன்றாக ஐக்கியப்பட்டு வாழ்வதற்கு, எங்களுக்கு உங்கள் ஒத்துழைப்புக்களை தர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Comments
Loading...