தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்து பிள்ளைகள் மற்றும் கணவனும் எறிகணையில் இழந்துவிட்டேன்! கண்ணீர்மல்க சாட்சியம்

4f71c0c3d37a0ff0bbc5111e492648a3ஐந்து பிள்ளைகள் மற்றும் கணவனும் எறிகணையில் இழந்துவிட்டேன் கண்ணீர்மல்க சாட்சியம்

மாத்தளன் வைத்தியசாலையில் இருந்த எனது கணவரை பார்க்க சென்ற போது இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் மாத்தளன் வைத்தியசாலை சேதமடைந்து இருந்ததுடன் இரத்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து கிடந்தனர். அதற்குள் எனது கணவரைக் காணவில்லை என பெண்ணொருவர் ஆணைக்குழுவிற்கு முன்னால் இன்று சாட்சியமளித்தார்.

காணாமற் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் விசாரணை இன்று முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதில் மேற்கண்டவாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில், இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் எனது கணவர் காயமடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். முதல் நாள் அவரைப் பார்த்துவிட்டு வந்தோம் மறுநாள் பார்க்கப் போகும்போது வைத்தியசாலை எறிகணை தாக்குதலால் முற்றாக சேதமடைந்து இருந்தது. எங்கு பார்த்தாலும் இரத்த வெள்ளத்தில் இறந்தவர்களின் ஆயிரக் கணக்கான சடலங்கள் கிடந்தன. எல்லா இடமும் தேடிப்பார்த்தேன் எனது கணவரைக் காணவில்லை .

அதற்குப் பிறகு இன்று வரை எனது கணவர் குறித்து எதுவும் எனக்கு தெரியாது. எனக்கு 8 பிள்ளைகள் அதில் 5 பிள்ளைகள் சிறிலங்கா இராணுவத்தின் எறிகணை வீச்சில் இறந்துவிட்டனர். மற்றைய இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து போய் விட்டனர். நானும் கடைசி பிள்ளையும் தான் இப்போது இருக்கின்றோம். வருமானம் எதுகும் இல்லை. நான் கூலி வேலைக்கும் வீடுகளுக்கு சென்று தூள் , மா இடித்துக் கொடுத்தும் அதில் வாற பணத்தை தான் கொண்டு தான் சீவிக்கின்றோம் என்றும் அவர் மேலும் சாட்சியமளித்தார்.

Comments
Loading...