தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா, ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

‘சன்ரைஸ்’ இந்திய ஓபன் சூப்பர்சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால், சக நாட்டவரான தகுதி நிலை வீராங்கனை ரியா முகர்ஜியை எதிர்கொண்டார். இதில் சாய்னா 21-5, 21-13 என்ற நேர் செட்டில் 28 நிமிடங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்து இன்னொரு சக வீராங்கனை ருத்விகாவை சந்திக்கிறார்.saina

இந்த போட்டியில் சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டால், தரவரிசையில் முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்து வரலாறு படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் 21-7, 21-8 என்ற நேர் செட்டில் நேகாவை பந்தாடினார்.

பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இவர்களை சீனாவின் டோங்னி-ஸியாவ் ஹான் இணை 21-16, 21-18 என்ற நேர் செட்டில் வென்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது ரவுண்டில் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-16 என்ற நேர் செட்டில் தனோன்சக்கை (தாய்லாந்து) வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரர் காஷ்யப் 16-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் 1 மணி 14 நிமிடங்கள் போராடி ஜென் ஹாவை(சீனத்தைபே) வென்றார். 

Comments
Loading...