Designed by Iniyas LTD
கடும் மழையால் கிளி மாவட்டத்தில் 7249 பேர் பாதிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2159 குடும்பங்களை சேர்ந்த 7249 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 274 குடும்பங்களை சேர்ந்த 934 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 75 குடும்பங்களை சேர்ந்த 242 பேர் இடம் பெயர்ந்த நிலையில் அவர்கள் ஐந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரு தினங்களாக கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இன்று மாலை கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களிலே இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் கரச்சி, மற்றும் கண்டாவளையை சேர்ந்தவர்கள் எனவும் கராச்சியை சேர்ந்த 49 குடும்பங்களை சேர்ந்த152 பேர் மருதநகர் பொதுநோக்கு மண்டபம் மற்றும் தாரணி குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கண்டாவளையை சேர்ந்த 26 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் சிவபுரம் முன்பள்ளி, புன்னைநிராவி பொது மண்டபம் மற்றும் நாதன்குடியிருப்பு முன்பள்ளி ஆகியவற்றில் தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
நான்கு பிரதேச செயலர் பிரிவுகளில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் ஒரு வீடு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 106 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன
இதேவேளை, மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.