Designed by Iniyas LTD
கருணாநிதியை சந்தித்த குலாம்நபிஆசாத்
தி.மு.க. தலைவர் கருணாநிதியை குலாம்நபி ஆசாத் சந்தித்து தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்தார். ஆலோசனை தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலை சந்திக்க ஒவ்வொரு கட்சியும் திட்டமிட்டு, அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது.
பிரதான கட்சிகளில் ஒன்றான தி.மு.க. சட்டசபை தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. இதற்கிடையே தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் சென்னை வந்தார். நேற்று காலை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகிளா காங்கிரஸ் செயலாளர்கள் கவிதா, சாரதாதேவி, தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் மயிலை அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு பகல் 11.30 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுவதற்காக குலாம்நபி ஆசாத், முகுல்வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு வந்தனர். அவர்களை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் வரவேற்று, அழைத்துச் சென்றனர். குலாம்நபி ஆசாத்தை கருணாநிதி கட்டித்தழுவி வரவேற்றார். பின்னர் கருணாநிதியுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த சந்திப்பு 12.30 மணி வரை நீடித்தது.
இந்த சந்திப்பின் போது, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதே அளவில் தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவும் இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் தரப்பில் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த குலாம்நபி ஆசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசி இருக்கிறீர்கள்? சட்டசபை தேர்தல் கூட்டணி முடிவாகி விட்டதா?
பதில்:- இந்திய அரசியலில் கருணாநிதி முக்கிய தலைவர். அவரை நான் அடிக்கடி சந்தித்து பேசுவேன். தி.மு.க.வும், காங்கிரசும் பழமையான கட்சிகள். இரு கட்சிகளும் இணைந்து பல தேர்தல்களை சந்தித்து உள்ளன. ஆட்சியும் அமைத்து இருக்கின்றன. எனவே தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து தேர்தலை சந்திக்கும். எங்கள் கட்சியின் தேசிய தலைமையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அக்கட்சியின் பிற தலைவர்களும் சேர்ந்து இதற்கான முடிவை எடுத்து இருக்கிறார்கள்.
கேள்வி:- ஆட்சியில் பங்கு என்பது குறித்து பேசப்பட்டதா?
பதில்:- ஆட்சியில் பங்கு என்பது சிறிய விஷயம், முதலில் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே முக்கியம். நாங்கள் அமைக்கும் இந்த அணி தான் வெற்றி பெறும். வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். தொகுதி பங்கீடு குறித்து பின்னர் ஆலோசித்து முடிவு செய்யப்படும். தி.மு.க. தலைமை தாங்கும்
கேள்வி:- தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வாய்ப்பு உள்ளதா?
பதில்:- கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. தான் எதையும் முடிவு செய்யும். தி.மு.க.வும், காங்கிரசும் கைகோர்த்து இருப்பதால் எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரக்கூடும்.
கேள்வி:- இலங்கை பிரச்சினையில் இரு கட்சிகளுக்கு இடையே மனக்கசப்பு நீடிக்கிறதே?
பதில்:- அரசியலில் சில பிரச்சினைகள் இருக்க தான் செய்யும். அதே நேரத்தில் எங்கள் இரு கட்சிகளுக்கிடையே பொதுவான எல்லா பிரச்சினைகளிலும் புரிதல் உள்ளது.
கேள்வி:- இரு கட்சிகளும் மீண்டும் கைகோர்ப்பதற்கு 2013-2016-க்கு இடையே என்ன மாற்றம் ஏற்பட்டது? (2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது)
பதில்:- தி.மு.க.வுடன் நாங்கள் கைகோர்ப்பது இது முதல் முறை அல்ல. கடந்த காலங்களில் நாங்கள் கூட்டணி வைத்து இருக்கிறோம். அரசியலில் சில சமயங்களில் நெருக்கடிகளும், நிர்ப்பந்தங்களும் ஏற்படுவது உண்டு. தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு குலாம்நபி ஆசாத் பதில் அளித்தார்.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு முன் தி.மு.க. விடை கொடுத்தது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் அரசியல் களத்தில் மீண்டும் ‘கை’ கோர்த்து உள்ளன. கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது கணிசமான தொண்டர்களுடன் காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் பிரிந்து சென்று த.மா.கா.வை தொடங்கி விட்டதால், தமிழக காங்கிரசின் வாக்கு சதவீதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது.
எனவே காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் குறைந்த அளவு தொகுதிகளே ஒதுக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் இணையும் பட்சத்தில் தொகுதி பங்கீடு விவரங்களை உடனடியாக வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிட தி.மு.க. முடிவு செய்து உள்ளது.
தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள கூட்டணிக்கு புதுச்சேரி காங்கிரசார் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான நாராயணசாமி கூறியதாவது:- சென்னையில் குலாம்நபி ஆசாத், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் தி.மு.க., காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டு இருப்பது நல்ல முன்னேற்றம். இது இரு கட்சிகளுக்கும் நல்ல பலனை அளிக்கும். புதுச்சேரியிலும் இந்த கூட்டணியே தொடரும்.
இதற்கு முன்னரும் காங்கிரஸ், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எனவே புதுச்சேரிக்கு இது ஒன்றும் புதியது அல்ல. புதுவையில் கடந்த காலங்களில் தி.மு.க.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சியே நடத்தி இருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் உரிய நேரத்தில் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.