Designed by Iniyas LTD
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – ஓ. பன்னீர்
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று அதிமுக பொருளாளரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
மதுரை தமுக்கம் கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தென் மாவட்டங்களின் அதிமுக வழக்குரைஞர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது: சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சியின் அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு அணிக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த வாக்காளர்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்களை எடுத்துச் செல்ல வேண்டும். அதிமுக பல்வேறு காலகட்டத்தில் சோதனைகளைச் சந்தித்த போதெல்லாம் வழக்குரைஞர் அணி பக்கபலமாக இருந்து வருகிறது.
வரும் தேர்தலில் வழக்குரைஞர் அணியின் பணிகள் சிறப்பாக இருக்க வேண்டும். பேரவைத் தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்படத் தேவையில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆகவே, நமது பணி, வாக்காளர்களைச் சந்தித்து திட்டங்களை விளக்குவது தான். 2011-இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிமுக அரசு, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான திட்டங்களைச் செயல்படுத்தி இருக்கிறது. முக்கியமாக தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்ததில் அதிமுகவுக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பெரும் பங்கு உண்டு. தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தும், மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் திமுக இதற்காக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், தமிழகத்தில் எந்தவொரு கட்சியும் செய்யாத சாதனையை அதிமுக அரசு செய்திருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் மக்களிடம் கொண்டு சென்றால் போதுமானது. அனைத்துத் தொகுதியிலும் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார். கூட்டத்தில், அதிமுக வழக்குரைஞர் அணி மாநிலத் தலைவர் வி.எஸ்.சேதுராமன் தலைமை வகித்தார். தமிழக அமைச்சர்கள் நத்தம் ஆர்.விஸ்வநாதன், செல்லூர் கே.ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.