Designed by Iniyas LTD
காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை தொடங்கியது
தமிழ் அமைப்புகளின் போராட்டத்துக்கு மத்தியில், இலங்கை இறுதிகட்ட போரின் போது காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை தொடங்கியது.
இலங்கையில் கடந்த 2009–ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்கள் குறித்து இன்னும் எந்த தகவலும் இல்லை.
காணாமல் போன தங்கள் சொந்தங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இறுதிகட்ட போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா. சபையும் இலங்கையை வலியுறுத்தி வருகின்றன.
இதைத்தொடர்ந்து கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், விசாரணைக்குழு ஒன்றை அப்போதைய அதிபர் ராஜபக்சே அமைத்தார். உடனே இந்த குழுவிடம் காணாமல் போனவர்கள் தொடர்பாக 20 ஆயிரத்துக்கும் அதிகமான புகார்கள் குவிந்தன. இதில், காணாமல் போன பாதுகாப்பு துறையினரின் உறவினர்கள் கொடுத்த சுமார் 5 ஆயிரம் புகார்களும் அடக்கம்.
இவ்வாறு பெறப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் வாய்மொழி சாட்சியங்கள் முதலில் பதிவு செய்யப்படும். பின்னர் அவை சுதந்திரமான ஒரு விசாரணைக்குழு மூலம் விசாரணை நடத்தப்படும்.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தின் திரிகோணமலையில் இருந்து பெறப்பட்ட புகார்கள் மீதான விசாரணை நேற்று தொடங்கியது. அந்த மாவட்டத்தில் இருந்து காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இந்த குழுவினர் விசாரணை நடத்தினர்.
ஆனால் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தின. காணாமல் போனவர்களின் உறவினர்கள் என கருதப்படும் ஏராளமான மக்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழ் மக்கள் சமூக மன்றம் என்ற அமைப்பு, விசாரணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–
இலங்கை அரசு ஒவ்வொரு முறையும் அமைத்து வரும் பல்வேறு குழுக்களின் முன்பு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் புகார்கள் கொடுத்து கொடுத்து சோர்ந்து விட்டார்கள். அதனால் அவர்களுக்கு எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.
இறுதிகட்ட போரின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பாக அரசுக்கு வந்துள்ள சர்வதேச நெருக்கடியை சமாளிக்கவே, சர்வதேச நிபுணர்களின் இந்த விசாரணைக்குழு முந்தைய ராஜபக்சே அரசால் அமைக்கப்பட்டு உள்ளது.
காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இந்த அமைப்பு நடத்தும் விசாரணை தவறானது. இந்த அமைப்பினர் தமிழ் மக்களின் சமூக பொருளாதார நிலை குறித்து அறிவதற்கே விசாரணை நடத்துகிறார்களே தவிர, காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு உதவி செய்வதற்கு அல்ல.
உண்மை, நீதி, பொறுப்புடைமை போன்றவற்றில், முந்தைய அரசின் கொள்கைகளையே தற்போதைய மைத்ரிபால சிறிசேனாவின் அரசும் கடைப்பிடிக்கிறது.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறுப்பட்டு உள்ளது.