தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் – முதல் மந்திரியிடம் மனு

கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் தண்ணீரை வைத்தே டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் செய்து வருகிறார்கள்.  ஆனால் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு படி அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுத்து வருகிறது.  இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததால் அணையின் நீர் மட்டம் தற்போது தான் 70 அடியை எட்டியுள்ளது.meet-Karnataka

இதனால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  இதற்கிடையே பல்வேறு விவசாய சங்கங்களும் கர்நாடகாவில் இருந்து காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு படி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.  ஆனால் கர்நாடக அரசு இங்குள்ள அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை என்றும், தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் அடிக்கடி கூறி வருகிறது. இதனால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் தற்போது உள்ளனர்.  இந்த நிலையில் இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், உழவர் உழைப்பாளி கட்சி தலைவர் செல்லமுத்து உள்பட 26 சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் நீர் பாசன மந்திரியையும் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர்கள் கர்நாடக முதல்-மந்திரியிடம் அளித்தனர்.  ஏற்கனவே குறுவை, தாளடி பாதிக்கப்பட்டது. தற்போது சம்பா சாகுபடிக்காகவாவது மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார்.  கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை.

தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எனவே காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. எங்கள் மாநில விவசாயிகளை கூட யாரும் நடவு செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கிறோம். விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து இந்த பிரச்சினை குறித்து முடிவு எடுப்பேன்.  காவிரி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.  மழை பெய்து அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையாவுடன் சந்தித்தது குறித்து கே.பி. ராமலிங்கம் கூறியதாவது:-  காவிரியில் போதிய தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.  செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் சம்பா சாகுபடி செய்ய வேண்டும். இதற்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவை சந்தித்து விளக்கி கூறினோம்.  மேட்டூர் அணையில் தற்போது 30 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது குறித்தும் அவரிடம் தெரிவித்தோம். தற்போது உள்ள இந்த தண்ணீரை வைத்து சம்பா சாகுபடி செய்ய இயலாது.  தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையும் உள்ளது.

இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்வது கடினம்.  தமிழக விவசாயிகளும், உங்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள். அண்ணன், தம்பி போன்றவர்கள் என்று தெரிவித்து எவ்வளவு தண்ணீர் திறந்துவிட முடியுமோ அவ்வளவு தண்ணீர் தாருங்கள். இருக்கும் தண்ணீரை பகிர்ந்து கொடுங்கள் என்று தெரிவித்தோம்.  அதற்கு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அதிகாரிகளுடன் கலந்து பேசி, பரிசீலனை செய்வதாக எங்களிடம் தெரிவித்தார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  அவருடன் பேசும்போது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் கட்டாயம் திறந்து விட வேண்டும் என்றும் அதற்கு பிறகு தண்ணீர் திறந்து விட்டால் விவசாயத்திற்கு பயன்படாது என்றும் கூறினோம்.

இந்தியாவில் உணவு உற்பத்தியில் தமிழகம் இணைய முடியாத நிலையில் இருக்கிறது. இதை மனதில் கொண்டு பாகுபாடு பாக்காமல் தமிழக விவசாயிகளின் நலன் காக்க தண்ணீர் தாருங்கள் என வேண்டுகோளும் வைத்திருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...