Designed by Iniyas LTD
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறது: சி.மகேந்திரன் குற்றச்சாட்டு
காவிரி பிரச்னையில் மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் குற்றம்சாட்டினார்.
கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி பிரச்சனையில் மத்திய அரசு பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அறிவுறுத்த வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கர்நாடக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒருங்கிணைந்து உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது கண்டிக்கத்தக்கது. இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னை காரணமாக நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தலை அறிவித்தவுடன் வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுப்பது வழக்கம். ஆனால், அவசர அவசரமாக தேதியை அறிவித்து, மறுநாள் காலையிலேயே வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது ஏற்புடையதல்ல. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பதவியேற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், பதவியேற்க 12 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்காக 35 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள். எனவே, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் ஜனநாயக படுகொலை நடைபெறவுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கருதுகிறது.
இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு இணைந்து நிற்க வேண்டும் என்றார் மகேந்திரன்.