Designed by Iniyas LTD
கிரானைட் வழக்கில் தீர்ப்பு! நீதிபதி பணி இடை நீக்கம்
மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவு கிரானைட் முறைகேடு நடைபெற்றது. இது தொடர்பாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் விசாரணை நடத்திய போலீசார் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதி கிரானைட் தொடர்பான வழக்குகளில் பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது. குறைந்த பட்ச தண்டனை வழங்கக் கூடிய வகையில் இருக்கும் வழக்குகளை மட்டுமே அவர் விசாரிப்பதாக கூறப்பட்டது.
அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடிய கிரானைட் வழக்குகளை விசாரிக்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அரசு மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ், அனைத்து வழக்குகளையும் மேலூர் மாஜிஸ்திரேட்டு விசாரிக்க உத்தரவு பிறப்பித்ததோடு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும். ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
இந்த நிலையில் கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி அரசு தரப்பில் முதன் முதலில் தாக்கல் செய்த 2 வழக்குகளை தள்ளுபடி செய்தும் அந்த வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.
வழக்கை தாக்கல் செய்த அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா மற்றும் அரசு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, 2 நீதிபதிகள் மேலூர் கோர்ட்டுக்கு சென்று வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர் அகமது, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் ஆகியோர் மேலூர் சென்று மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதியிடம் தனி அறையில் விசாரணை நடத்தினர்.
இன்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர் அகமது, தலைமை ஜூடிசியல் மாஜிஸ் திரேட்டு சரவணன் ஆகியோர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு பகல் 11.30 மணிக்கு வந்தனர். அவர்கள் மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதியிடம் அவர் மீதான முறைகேடுகள் தொடர்பாக தனி அறையில் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு விசாரணை தகவல்கள் தொடர்பான அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து மாஜிஸ்தி ரேட்டு மகேந்திர பூபதி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதிகள் 7 பேர் கொண்ட குழு ஆலோசனை நடத்தியது.
இதில், மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதியை இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதியை பணி இடைநீக்கம் செய்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பொன்.கலையரசன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட விரைவு கோர்ட்டு 2-வது நீதிபதி பாரதிராஜா மேலூர் நீதிமன்ற புதிய மாஜிஸ்திரேட்டாக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக சென்று மேலூர் குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டாக பதவி ஏற்றுக்கொண்டார்.