Designed by Iniyas LTD
தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க வெளிநாட்டவர்களுக்கு 1000 ரூபா!
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் எடுத்த முடிவின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து பழம்சிறப்பு வாய்ந்த சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக்கட்டணம் 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த முடிவுக்கு நாட்டில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு தள்ளிப்போடப்பட்டது.
இன்றுமுதல் அமலுக்குவரும் இந்த உத்தரவின்படி, முன்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் தாஜ் மஹால் வளாகத்துக்குள் நுழைய வசூலிக்கப்பட்ட 250 ரூபாய் கட்டணம் தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, நுழைவு வரியாக 500 ரூபாயாக வசூலிக்கப்படுவதால், முன்னர் 250 ரூபாய் கட்டணத்தில் தாஜ் மஹாலை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனி ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல், உள்நாட்டு மக்களும் ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை சுற்றிப்பார்க்க இனி பத்து ரூபாய்க்கு பதில் 40 ரூபாய் செலுத்த வேண்டும். குதுப் மினார் போன்ற பழம்சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கான நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு ஐந்து முதல் பதினைந்து ரூபாயும், வெளிநாட்டினருக்கு 100 முதல் 200 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது.