தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

முல்லைத்தீவு மாங்குளம் – பாண்டியன்குளப் பகுதியில் இருந்து கிளிநொச்சி – பரந்தன் நோக்கி மாங்குளம் மல்லாவி வீதியூடாக வந்துகொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது வழிமறித்து ஆயுதங்களுடன் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 3 பேரினாலேயே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – பரந்தன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் பாஸ்கரன் என்னும் ஊடகவியலாளர் மாங்குளம் – பாண்டியன்குளப் பகுதியில் உள்ள அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பி வந்துகொண்டிருந்த போதே மோட்டார் சைக்கிலில் வந்த 3 பேர் வழிமறித்துள்ளனர்.

இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டர் சைக்கிளில் ஊடகவியலாளரை துரத்திய குறித்த நபர்கள் அவர் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் இருந்து தப்பிய ஊடகவியலாளர் மாங்குளம் சந்தியில் உள்ள ஆட்டோ தரிப்பிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இதன்போது, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதை அவதனித்த அக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர், அங்கு நின்றவர்கள் ஒன்றிணைந்து அக் குழுவினரை துரத்திச்சென்று ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர். ஏனைய இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.

இதேவேளை, பிடிப்பட்ட சந்தேக நபரும், அவரின் மோட்டார் சைக்கிலும் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Loading...