Designed by Iniyas LTD
கிளி மருத்துவமனை உணவகத்தில் முறைகேடு! நீதிமன்றில் வழக்கு
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உணவகத்தின் கூறுவிலை கோரலில் முறைகேடு இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருப்பதனை யடுத்து உணவகத்தினை மூடுமாறு வைத்தியசாலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள உணவகத்தினை தனியாரிடம் விடுவதற்கான கூறுவிலைகோரல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்றது .
இதில் பலரும் பல பெறுமதியினை கோரலாக இட்டிருந்தனர் இதில் அதிக தொகையை கோரியவரிடம் உணவக உரிமையை கையளிக்காது வைத்தியசாலை நிர்வாகத்தினர் குறைந்த பெறுமதியினை கோரிய ஒருவரிடம் உணவக உரிமையை கடந்த மே மாதம் கையளித்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டவர் ஓர் வைத்தியரின் உறவினர் என்ற காரணத்தினால் வழங்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்ப பட்டிருந்த நிலையில் தற்போது உணவக உரிமையை கொண்டுள்ளவர் கோரிய தொகையைவிட அதிக தொகையினை வைத்தியசாலைக்கு வழங்குவதாக கூறுவிலையில் பெறுமதியினை தெரிவித்தும் உணவக உரிமை வழங்கப்படாது பாதிக்கப்பட்ட ஒருவர் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்
வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனையடுத்து நீதிமன்றம் இன்றைய தினம் குறித்த வழக்கினை விசாரணைக்கு எடுக்கும் பொருட்டு வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அழைப்பாணை அனுப்பியிருந்த து. இதனை அடுத்து உணவகம் உடனடியாக வைத்தியசாலை நிர்வாகத்தினால் இழுத்து மூடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்தினரின் இம்மாதிரியான செயல்பாட்டினால் நோயாளர்கள் உணவிற்கு சிரமத்தை எதிரிகொள்வதுடன் பல நிர்வாக சிக்கல்களும் ஏற்படுவது தொடர்பில் வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த வைத்தியசாலை உணவக கூறுவிலையில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்தே உணவகம் மூடப்பட்டுள்ளதாக நிர்வாகத்தினர் அறியத்தந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நாளை ( இன்று ) இடம்பெறவுள்ளது.
இதன் தீர்வின் பின்னர் எதிர்காலத்தில் உணவகத்தினை நோயாளர் நலன்புரிச் சங்கத்திடமே வழங்குமாறு முடிவாகியுள்ளது. இதன் பிரகாரம் கட்டிடத்திற்கான வாடகைப்பணம் அரச திறைசேரிக்கும். இலாப பணம் நலன்புரிச் செயல்பாட்டிற்குமாக செயல்படும் . எனத் தெரிவித்தனர்.