தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிழக்கு மாகாணம் சென்ற லவுரா டேவிஸ் கண்காணிப்பு

பிரித்தானியாவின் இலங்கைக்கான பிரதித் தூதுவர்  லவுரா டேவிஸ் தாம் கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த போது சிலர் தொடர்ச்சியாக தம்மை கண்காணித்தனர் என குற்றம்சுமத்தியுள்ளார். பிரித்தானிய தூதரக இணைய தளத்தின் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு தாம் சென்றிருந்த போது, தம்மைச் சந்தித்தவர்கள் பின் தொடரப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தம்மை சிலர் பின்தொடர்ந்து கண்காணிக்கின்றார்கள் என்பதனை நிராகரிக்க முடியாத அளவிற்கு உணர்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.Slide1

தாம் சந்தித்தவர்களிடம் தொலைபேசி அழைப்பின் மூலமும் நேரடியாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் லவுரா டேவிஸ் தெரிவித்துள்ளார். அவர்களிடம் என்ன பேசப்பட்டது, எதற்காக சந்தித்தேன் போன்ற வினாக்கள் தொடுக்கப்பட்டிருந்தன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் தம்மை சந்திக்க அஞ்சியதாகவும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை எனவும், கவலையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா மனித உரிமைப்பேரவை விசாரணைகளுக்கு ஆதாரம் திரட்டும் நோக்கில் தாம் கிழக்கிற்கு சென்றுள்ளதாக சில இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் பிரித்தானிய கூடுதல் சிரத்தை எடுத்துக் கொள்கிறது. போர் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்டப்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும் துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் மீது பூரண நம்பிக்கை இருக்கிறது. அவர்களின் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. உள்நாட்டு ரீதியில் குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் போன்றன தொடர்பிலும் பிரித்தானிய கரிசனை கொண்டுள்ளது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிட்டக் கூடிய வகையிலான ஓர் பொறிமுறைமையை உருவாக்கி அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும்” என லவுரா டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...