தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொங்.நாடு.முன்.கழகத்தில் பிளவு

கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் ஒரு பிரிவினர் தனிக் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் உள்ள கொங்கு கவுண்டர் இனி மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி கொங்குநாடு முன்னேற்றக் கழகம் எனும் கொமுக. 2009-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் தலைவராக பெஸ்ட் ராமசாமி. பொதுச்செயலாளராக ஈஸ்வரன் பணியாற்றினார்.knmk

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஈஸ்வரன் தலைமையில் கடந்த ஆண்டு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொ.மு.தே.க.) உருவானது. ஈஸ்வரன் பிரிந்து சென்ற பிறகு கொ.மு.க. பொதுச்செயலாளராக ஜி.கே.நாகராஜ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் நாகராஜூக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு இவர் விலக, மீண்டும் உடைந்தது கட்சி. இப்போது மூன்றாம் முறையாக அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் மாநில தலைமை நிலைய செயலர் பொறுப்பில் உள்ள காங்கேயத்தைச் சேர்ந்த தங்கவேல், அக்கட்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “பெஸ்ட் ராமசாமி, செயல்பாடுகள் பெஸ்டாக இல்லை. வேஸ்ட்டாக உள்ளது. இனியும் கொமுகவில் நீடித்தால் கொங்கு மண்டல மக்களுக்கு எந்த பணியும் செய்ய முடியாது. கொங்கு சமுதாயத்திற்கு எந்த சேவையும் செய்ய முடியாது. கொமுகவில் இருந்து ஏற்கெனவே 60 சதவீதம் பேர் வெளியேறிவிட்டனர். வரும் 27 ஆம் தேதி, தீரன் சின்னமலை நினைவிடமான ஓடாநிலையில், புதிய கட்சியை தொடங்க உள்ளோம். அப்போது புதிய கட்சிக்கான கொடியையையும் அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார். வரும் தேர்தலில் அதிமுக அணியில் இணைந்து போட்டியிடுகிறது கொங்குநாடு முன்னேற்றக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...