Designed by Iniyas LTD
கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.
தி நேசன் நாளிதழின் பிரதி ஆசிரியராக இருந்த கீத் நொயார் 2008ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மேஜர் உள்ளிட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அப்போது பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சவை நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணி நேரம் விசாரணை செய்தனர்.
அவர் மீண்டும் விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த காலப்பகுதியில் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்ததால் கோத்தாபய ராஜபக்ச இந்தச் சம்பவம் தொடர்பாக அறிந்திருந்தாரா என்ற கோணத்திலேயே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
கீத் நொயார் 2008 மே 23ஆம் நாள் அதிகாலையில் விடுவிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதில் தாம் தலையிட்டதாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தமை குறித்தும், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.