Designed by Iniyas LTD
சபாநாயகர் மீது காங்கிரஸ் அவதூறு கூறுவது சரியல்ல – பாஜக கண்டனம்
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி கோரும் விஷயத்தில் சபாநாயகர் மீது காங்கிரஸ் அவதூறு கூறுவது சரியல்ல என்று பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி இதுவரை எந்தக் கட்சிக்கும் ஒதுக்கப்படவில்லை. கேபினட் மந்திரி அந்தஸ்து கொண்ட இந்த பதவியை காங்கிரஸ் தங்களுக்கு ஒதுக்கக்கோரி வருகிறது.
எனினும், பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 10 சதவீதமான 55 உறுப்பினர்கள் யாருக்கும் இல்லாததால் சபாநாயகர் இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவது குறித்த முடிவை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாராளுமன்ற காங்கிரசின் துணைத் தலைவரான அமரீந்தர் சிங் இதுபற்றி கூறுகையில், நரேந்திர மோடி அரசு காங்கிரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அளிக்காதது மோசமான செயல். இது முறையற்றதும் கூட. இந்த விஷயத்தில் இதுவரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காதது, இதில் மத்திய அரசின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.
இதேபோல் காங்கிரசின் மற்றொரு மூத்த தலைவரான கமல்நாத், சில கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு சபாநாயகர் முக்கியத்துவம் தருவதே இல்லை என்று மறைமுகமாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் தலைவர்களின் கருத்து பற்றி பாராளுமன்ற விவகார மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:–
சபாநாயகர்தான் பாராளுமன்றத்தின் தலைவர். அந்த பொறுப்பில் யார் இருந்தாலும் அவர் நடுநிலையாகத்தான் செயல்படுவார். எதிர்க்கட்சித் தலைவர் பதவி விஷயத்தில் சபாநாயகரை நோக்கி காங்கிரஸ் தலைவர்கள் கூறும் அவதூறுகள் சொற்கள் அளவுக்கு அதிகமானவை, கண்டிக்கத்தக்கவை, ஏற்றுக் கொள்ளமுடியாதவை.
காங்கிரசின் குற்றச்சாட்டு அவர்களது தேர்தல் தோல்வியின் விரக்தியைக் காட்டுகிறது. இதற்காக சபாநாயகர் மீது அவதூறு கூறுவது சரியல்ல. நீங்கள் ஆட்சி செய்வதற்காக இந்த தேர்தலில் மக்கள் உங்களுக்கு தீர்ப்பு வழங்கவில்லை. தவிர 55 உறுப்பினர்களைக் கூட உங்களுக்கு மக்கள் தரவில்லை. இதனால்தான் உங்களால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பெற முடியவில்லை. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்கள் எப்படி உதவி செய்ய முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவாதித்தனர். கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பாராளுமன்ற எதிர்க்கட்சிகளில் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருப்பதால் நமது கட்சிக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவியை தீவிரமாக கேட்டுப் பெறவேண்டும் என்றனர்.
இது பற்றி முன்னாள் மத்திய மந்திரி மணீஷ் திவாரி கூறுகையில், சட்டப்பூர்வமாகவும், வாத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை காங்கிரசுக்கே ஒதுக்கவேண்டும் என்றார். தங்கள் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தராவிட்டால், இந்த பிரச்சினையை கோர்ட்டுக்கு கொண்டு செல்வது என ஏற்கனவே காங்கிரஸ் கூறியிருந்தது, குறிப்பிடத்தக்கது.