Designed by Iniyas LTD
ரணில் பொன்சேகாவிற்கு ஆதரவு இல்லை – ஜேவிபி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளராக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ, ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவோ போட்டியிட்டால் அவர்களுக்கு ஆதரவளிக்கமாட்டோம் என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். மல்வத்த பீடத்தின் மஹாநாயக்கர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை நேற்று சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஐ.தே.க.யின் குழுவாதம் காரணமாக பொது அபேட்சகர் என்ற வகையில் ரணில் விக்கரமசிங்க உடன் கைக்கோர்க்க முடியாதுள்ளது.1947ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாறி மாறி ஆட்சியமைக்கப்பட்டதால் கிடைத்த பயன் ஒன்றுமில்லை. அடுத்துவரும் இரண்டு வருடங்களும் மிகப் பயங்கரமானதாக உள்ளது. தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் உள்ளது. அதே நேரம் மாகாண சபைகள் என்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்றும் பல்பக்க பலத்தை அரசு தனது கையில் வைத்துள்ளது.
அதனை விட சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் எவ்வாறான சூழலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தாலும் அது மிகப் பயங்கரமானதாக இருக்கும். 2017ஆம் ஆண்டுதான் ஜனாதிபதத் தேர்தல் நடக்க வேண்டும். அப்படி இருக்க அதற்கு முன் அவசரப்படுவதில் இருந்தே அதன் தன்மையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஏதிரணியின் பொது வேட்பாளராக பெரும்பாலும் ரணில் விக்ரமசிங்க வர முடியும். ஐ.தே.க.வில் இன்று குழுவாதம் தலை தூக்கி உள்ளது. இதனால் அவர்களை ஆதரிப்பதில் பயன் இருக்காது.
தற்போதைய அரசை மாற்றுவது எமது நீண்ட பிரச்சினைக்குத் தீர்வாகாது. மேடைகளில் அரசியல் தலைவர்கள் கைக்கோர்த்து நிற்பதனால் எதுவும் நடக்காது. இதற்கு முன்னரும் இதுநடந்தது. நீதி, சட்டவாக்கம், என்ற இரண்டு துறைகளையும் மற்றொரு துறையான நிர்வாகம் என்ற ஜனாதிபதி முறை விழுங்கிய நிலையில் எதுவித நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படுவதுடன் பொருளாதாரப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
நாட்டில் ஒரு சிலர் மட்டும் பாரிய செல்வத்துக்கு அதிபதியாக இருந்து கொண்டு 98 சதவீதமான பொது மக்கள் வறுமையில் வாடும் பொது சகல அதிகாரங்களையும் ஓரிடத்தில் குவிய வைத்து நியாயத்தை எதிர்பார்ப்பதென்பது அல்லது ஆட்சி மாற்றம் என்பது தீர்வை தறாது. மாறாக எதிர்காலம் மிகப் பயங்கர நிலையை மட்டுமே தோற்றுவிக்கும் என்றார்.