தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேச யோகா தினம்: இலங்கையின் பல பகுதிகளில் யோகா தினம் அனுசரிப்பு!

ஐ.நா மன்றத்தில் இந்தியா முன்வைத்த வேண்டுகோளை ஏற்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சர்வதேச யோகா தினம் இலங்கையின் பல பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, வவுனியா கனராயன்குளம் மற்றும் திருகோணமலை நகர் ஆகிய இடங்களிலும் யோகா தினத்தையொட்டிய நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன.

yoga day

மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் யோகா நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அங்கு நடந்த சூரிய நமஸ்கார நிகழ்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.  பிரதம விருந்தினராக அமைச்சர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டிருந்தார்.

சுமூகக் கலாசார விழுமியங்களை மேம்படுத்துவதற்காகச் செயற்பட்டு வருகின்ற ஓம் கிரியா யோக ஆரண்யம் என்ற அமைப்பு தனது கிளையொன்றை வவுனியா கனகராயன்குளத்தில் யோகா தினத்தன்று திறந்து வைத்திருக்கின்றது.

அதனைத் தொடர்ந்து யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டு, பல்வேறு இழப்புக்களுக்கு உள்ளாகி மனவடுக்களைச் சுமந்துள்ள வடபகுதி மக்கள் மத்தியில் யோகாசனப் பயிற்சி முக்கியத்துவம் பெற்றிருப்பதாக வவுனியாவைச் சேர்ந்த மனவளக்கலை பேராசிரியரும், ஓய்வு நிலை ஆசிரியருமாகிய சிதம்பரப்பிள்ளை சந்திரன் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...