தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாதியப் பிரச்சினையை உருவாக்கி அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி! தீபச்செல்வன்

774481_10151594213178801_695233780_o

கிளிநொச்சியில் சமீபத்தில் நடந்த அதிபர் நிர்வாகப் பிரச்சினை ஒன்றை சாதிப்பிரச்சினையாக சித்திரிக்க சிலர் முயற்சி செய்வதுதான் உண்மையான நிலவரம் என்று கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷவின் காலத்தில் உத்தியோகத்தர்களை மகிந்தவின் குறுநில மன்னர்களால் பின் கதவால் தெரிவு செய்தபோது வாழ்த்துப் பாடியவர்களே இவ்வாறு சாதிப் பிரச்சினையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் சிலருக்கு இதை சாதியப் பிரச்சினையாக்கி கிளிநொச்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தீபச்செல்வன் தன்னுடைய சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்திற்கு எதிரான இவர்கள், இல்லாத சாதிப்பிரச்சினையை உருவாக்கி, பின்னர் அதை அரசியல் பிரச்சினையாக்கி, அதற்கு அறிக்கைவிட்டு அதில் அரசியல் இலாபம் தேட முனையும் தம் முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிறுவன தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் அன்றைய மகிந்தவின் குறுநில மன்னர்களால் தீர்மானிக்கப்பட்டபோது மகிந்த அரசுக்கு வாழ்த்துப் பாடியவர்கள்தான் இன்று இவ்வாறு ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் அரசியல் மயப்பட்டு, மகிந்தவின் குறுநில மன்னர்களால்தான் தீர்மானிக்கப்பட்ட கல்வித்துறை உள்ளிட்ட வடக்கு நிர்வாகம், இன்று மீண்டு வருகிறது என்றும், மகிந்த கட்சிக்கு வேலை செய்தால் உத்தியோகம் என்ற நிலை இன்றில்லை.

இன்று திறமையின் அடிப்படையில் பரீட்சையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் சிலர் பின் கதவால் நுழையும் அன்றைய காலத்தையும் குறுநில மன்னர்களால் உத்தியோகத்திற்கு ஆளெடுக்கும் காலத்தையும் அதிகமும் விரும்புகிறார்கள் என்றும் அவர் எழுதியுள்ளார்.

தகுதி இருந்தும் அன்றைக்கு மகிந்தவின் குறுநில மன்னர்களிடம் செல்ல மறுத்தவர்களும் தமிழ் தேசியப் பற்றாளர்களும் வஞ்சிக்கப்பட்டபோது, வாழ்த்துப் பாடிக்கொண்டிருந்தவர்கள் இன்று சாதிப் பிரச்சினையை ஏற்படுத்தி குளிர்காய முனைவதைவிடவும் மிகவும் அருவருக்கத் தக்க விடயம் வேறில்லை என்றும் தீபச்செல்வன் மேலும் அதில் எழுதியுள்ளார்.

Comments
Loading...