Designed by Iniyas LTD
சிரியாவின் எல்லை பகுதிக்குள் துருக்கி ராணுவம் நுழையவில்லை – துருக்கி அரசாங்கம்
சிரியா நாட்டின் எல்லைக்குள் எங்கள் ராணுவம் நுழையவில்லை என்று துருக்கி ராணுவ அமைச்சகம் மறுத்து உள்ளது.
சிரியா குற்றச்சாட்டு
ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வரும், சிரியாவின் அருகே துருக்கி நாடு உள்ளது. சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு சண்டையால் அங்கிருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் வடக்கு துருக்கி பகுதிக்குள் நுழைகிறார்கள். இவர்களை துருக்கி ராணுவம் வழிமறித்து மீண்டும் சிரியாவுக்கே அனுப்பி வைத்து வருகிறது. சிரியாவின் எல்லையோரத்தில் இருந்தவாறு துருக்கியில் 30 ஆண்டுகளாக தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வரும் ஒய்.பி.ஜி. தீவிரவாத இயக்கத்தினரும் அடிக்கடி ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தங்களுடைய எல்லையில் ஏராளமான துருப்புகளை துருக்கி நிறுத்தி வைத்து உள்ளது. இதற்கிடையே, அண்மையில் 100-க்கும் மேற்பட்ட துருக்கி ராணுவ வீரர்கள் 12 கனரக வாகனங்களில் ஆயுதங்களுடன் தங்களது எல்லைக்குள் நுழைந்ததாகவும், நவீன ரக எந்திர துப்பாக்கிகளை சிரியா அரசாங்கத்துக்கு எதிராக போராடி வரும் தீவிரவாதிகளுக்கு வினியோகம் செய்ததாகவும் துருக்கி மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிரியா வெளியுறவு அமைச்சகம் புகார் செய்தது.
உண்மை கிடையாது
இதை துருக்கி அரசாங்கம் மறுத்து உள்ளது. இதுபற்றி துருக்கி ராணுவ மந்திரி இஸ்மத் இல்மாஸ் கூறுகையில், ‘‘இதில் எந்த உண்மையும் இல்லை. சிரியாவின் எல்லை பகுதிக்குள் எங்கள் ராணுவம் நுழையவில்லை’’ என்று குறிப்பிட்டார். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் துருக்கியின் இன்கிர்லிக் விமானப்படைத் தளத்துக்கு வந்து இருப்பதாக வெளியான தகவலையும் அவர் மறுத்தார்.
துருக்கி வீரர் சுட்டுக்கொலை
இதற்கிடையே, நேற்று முன்தினம் சிரியாவின் எல்லையொட்டிய பகுதியில் இருந்து சட்டவிரோதமாக துருக்கிக்குள் நுழைய முயன்ற ஒய்.பி.ஜி. குழுவினருக்கும், துருக்கி ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால், வடக்கு சிரியாவின் அலெப்போ நகர விமானப்படை தளத்தை சிரியா தீவிரவாதிகளிடம் இருந்து ஆக்கிரமித்துக் கொண்ட ஒய்.பி.ஜி. தீவிரவாதிகளின் முகாம்கள் மீது துருக்கிய படைகள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தின. இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. சிரியாவில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய பகுதிகளில் இருந்து ஒய்.பி.ஜி. தீவிரவாதிகள் வெளியேறவேண்டும் என்று துருக்கி பிரதமர் அகமத் தவுடோல்கு வற்புறுத்தி உள்ளார்.