Designed by Iniyas LTD
சிரியாவில் சண்டை நிறுத்த அறிவிப்பு
சிரியாவில் சண்டை நிறுத்தம் செய்வதற்கு 17 நாடுகள் பங்கேற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. உள்நாட்டுப்போர் சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக 5 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 2லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 1 கோடியே 35 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சிரியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக துருக்கி வழியாக கிரீஸ் சென்று, அங்கிருந்து பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகி வருகிறார்கள். 
பேச்சு வார்த்தை
இந்த நிலையில் சிரியா உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்று முன்தினம் நீண்டதொரு பேச்சு வார்த்தை நடந்தது. இதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 17 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் சிரியாவில் சண்டை நிறுத்தம் செய்வதற்கு அனைத்து நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டது. அதே நேரத்தில் இந்த சண்டை நிறுத்தம், அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், அல் நுஸ்ரா முன்னணியினருக்கும் எதிரான தாக்குதல்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 17 உறுப்பினர்களை கொண்ட சிரியா ஆதரவு குழு, சிரியாவுக்கான மனிதநேய உதவிகளை துரிதப்படுத்தவும், விஸ்தரிக்கவும் முன்வந்துள்ளன. அலெப்போ மாகாணத்தில் ரஷியாவின் வான்வழி தாக்குதல் துணையோடு, அதிபர் ஆதரவு படைகள் முன்னேறி வருகிற நிலையில், இந்த சண்டை நிறுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜான் கெர்ரி அறிவிப்பு
சண்டை நிறுத்த அறிவிப்பு தொடர்பாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்கெய் லாப்ரோவ், ஐ.நா. தூதர் ஸ்டாபன் டி மிஸ்டூரா ஆகியோர் உடனிருக்க அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சண்டை நிறுத்த திட்டம் ஒரு லட்சியம் போன்றது. இதில் உண்மையான சோதனை என்னவென்றால், சம்பந்தப்பட்ட தரப்பினரில் எத்தனை பேர் இதை மதித்து நடந்துகொள்கிறார்கள் என்பதுதான். நாங்கள் எடுத்திருக்கும் முடிவு காகிதத்தில்தான் இருக்கிறது. அடுத்த சில நாட்களில் இது செயல்பாட்டுக்கு வருவதை காண வேண்டும்” என கூறினார்.
ஜெர்மனி வெளியுறவு மந்திரி பிராங்க் வால்டர் ஸ்டீன்மீயர் கூறும்போது, “இது ஒரு திருப்புமுனையாக மாறுமா என்பதை அடுத்த சில நாட்களில் பார்த்து விட முடியும்” என்றார். இங்கிலாந்து வெளியுறவு மந்திரி பிலிப் ஹேமண்ட் கருத்து தெரிவிக்கையில், “இந்த சண்டை நிறுத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால், அது அங்கு மக்கள் கொன்று குவிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர ஒரு முக்கிய நடவடிக்கையாக அமையும். ரஷியா, தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதாக கூறினாலும், தீவிரவாதிகள் அல்லாதவர்கள்மீதும், அப்பாவி மக்கள் மீதும் ரஷியா தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. இது நிறுத்தப்படவேண்டும்” என கூறினார்.
சிரியா எதிர்க்கட்சி
வரவேற்பு இந்த சண்டை நிறுத்த அறிவிப்பு குறித்து சிரியா அரசு அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்க வில்லை. இருப்பினும் முக்கிய எதிர்க்கட்சி வரவேற்றுள்ளது. அதன் செய்தி தொடர்பாளர் சலிம் அல் முஸ்லாத் நிருபர்களிடம் பேசுகையில்,“ சுவிட்சர்லாந்தில் அரசின் பிரதிநிதிகளுடனான பேச்சு வார்த்தையில் நாங்கள் சேருவதற்கு முன்பாக இந்த சண்டை நிறுத்தம் பலன் தர வேண்டும். நாங்கள் அதைக்கண்டால், ஜெனீவா பேச்சு வார்த்தைக்கு வருவோம்” என்று கூறினார்.