Designed by Iniyas LTD
சிரியா மீது தாக்குதல் நடத்தப்போகும் பிரித்தானியா!
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், அமெரிக்காவுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்த தெரேசா மேயின் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரித்தானியாவும் இணையவுள்ளதாக ஒரு கருத்தொன்று பரவ ஆரம்பித்ததை தொடர்ந்தே எதிர்கட்சித் தலைவர்கள் மேற்குறித்தவாறு எச்சரித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டிம் ஃபெரோன் (Tim Farron), “அமெரிக்காவினால் சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல்களில் பிரித்தானியாவும் இணைவதென்பது வருத்தத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் பிரித்தானிய தொழிற்கட்சியை விட தெரேசா மேயின் கட்சி முன்னிலையில் திகழும் என அண்மையில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக சுமார் 48 சதவீதத்தினரும் தொழிற்கட்சிக்கு ஆதரவாக 24 சதவீதத்தினரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.