Designed by Iniyas LTD
சிறீலங்கா மீதுவிசாரணை – நவநீதம்பிள்ளை பரிந்துரை!

சிறீலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரை தொடர்பான அவரது அறிக்கை நேற்றிரவு வெளியாகி உள்ளது.
சிலநாட்களுக்கு முன்னர் இந்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் வெளிவந்திருந்த நிலையில் தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது.
18 பக்கங்கள் கொண்டுள்ள இந்த அறிக்கையின் முன்னுரையில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் சிறீலங்காவில் தோல்வியடைந்ததுள்ள நிலையில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் சில முன்னேற்றம் கண்டிருப்பதனை ஒத்துக் கொள்வதாகவும் எனினும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைத்த சிறப்பு பொறிமுறைகள் ஊடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு சிறீலங்கா உரிய பதிலளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வெளிவந்துள்ள புதிய ஆதாரங்கள் ஆயுத மோதல்களின் இறுதி கட்டங்களில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படையாக தெரிவிக்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் பின்னணியில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வரும் மனித உரிமைச்சபைக் கூட்டத்தொடரில் சிறீலங்கா விவகாரத்தில் வலுவான அனைத்துலக விசாரணை நடத்த கோரும் தீர்மானத்துக்கு வழிகோல வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.