Designed by Iniyas LTD
சிறுநீரக கடத்தல் எட்டு இந்தியர்கள் கைது!
இலங்கையை மையப்படுத்தி, இந்தியாவில் இருந்து அழைத்து வரப்படும் அப்பாவி பொது மக்களுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சை செய்து அவர்களது சிறு நீரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த மோசடி வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் 8 இந்தியர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி வீசா இன்றி அல்லது வீஸா காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியிருந்த, இத்தகைய சிறு நீரக மோசடி வர்த்தகத்துடன் தொடர்புபட்டதாக நம்பப்படும் 8 இந்தியர்கள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விஷேட பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் உத்தரவுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நுவன் வெதிசிங்கவின் கீழ் முன்னெடுக்கப்ப்ட்டு வரும் இது குறித்த விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த சிறு நீரக மோசடி வர்த்தகம் தொடர்பிலான வைத்தியர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது வெளிப்படுத்தப் பட்ட தகவல்களுக்கு அமைவாகவே வெள்ளவத்தை மற்றும் ஹெவலொக் நகர பகுதிகளில் இருந்து இந்த 8 இந்தியர்களும் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
முதலில் வெள்ளவத்தை பகுதியில் இருந்து 6 பேரும் பின்னர் ஹெவலொக் பகுதியில் இருந்து இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் இரவு 11.45 மணியளவில் வெள்ளவத்தை பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட நடவடிக்கையில், அங்குள்ள மாடிக் கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் தங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்படும் போது அவர்களது அடி வயிற்றுப்பகுதியில் சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சை செய்துகொண்டமைக்கான தழும்புகள் காணப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் வீஸா இன்றியே நாட்டில் தங்கியிருந்துள்ளமை உறுதியானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்தே ஹெவலொக் பகுதியில் வைத்து மேலும் இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதான 8 இந்தியர்களும் சாரதி, தையல் தொழிலாளிகளாக இலங்கையில் பணியாற்றியுள்ளதுடன், வீசா அனுமதி முடிவடைந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கி இருந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
முன்னதாக இந்தியாவின் அஹமதாபாத் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்த விஷேட விசாரணை ஒன்றூடாக இலங்கையை மையப்படுத்தி இடம்பெற்ற சர்வதேச சிறு நீரக மோசடி தொடர்பிலான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
இது தொடர்பில் இலங்கையின் 5 தனியார் வைத்தியசாலைகள் மற்றும் அதில் பணியாற்றும் ஆறு வைத்தியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு 5 பேர் கொண்ட குழுவொன்றினை அமைத்து விசாரணை நடத்தியது. இதில் குறித்த மோசடி தொடர்பிலான சில தகவல்களை அந்த குழு உறுதி செய்திருந்ததுடன் பகிரங்கப்படுத்தப்படாத அக்குழுவின் அறிக்கை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மேலதிக விசாரணைகளுக்காக பாரப்படுத்தப்பட்டது.
அத்துடன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, வைத்தியர்கள் தொடர்பில் முன்னெடுத்த விசாரணைகளிலேயே, சிறு நீரக மோசடி சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.