தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பயங்கரவாத தடுப்புப்பிரிவு என எவரும் கிடையாதாம்!

ranilll-720x480யாழில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரென எவரும் கிடையாது. அவ்வாறு எவரும் பொலிஸ் நிலையங்களில் பணியாற்றவில்லை மீண்டுமொரு இருண்டகாலம் ஊடகத்துறைக்கு ஏற்பட அனுமதிக்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து உள்ளார்.
ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, யாழ்.ஊடக அமையம் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உள்ளிட்ட ஊடக அமைப்புக்களினை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்றையதினம் அலரி மாளிகையில் பிரதமருடன்  சந்திப்பை மேற்கொண்டனர்.
அதன்போது  நெல்லியடி மற்றும் யாழ். பொலிஸ் நிலையங்களில்  கடமையாற்றுவதாக தெரிவிக்கும் சிலர் தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு என அடையாளப்படுத்தி யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும், உளவியல் ரீதியினில் நெருக்குவாரங்களை கொடுப்பதாகவும் ஊடக அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்தன.
அதன்போது தற்போது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரென எவரும் கிடையாது. அவ்வாறு எவரும் பொலிஸ் நிலையங்களினில் பணியாற்றவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு  பணிப்புரை விடுத்தார். அத்துடன் தொடர்புடைய அமைச்சிற்கு அது தொடர்பில் தெரியப்படுத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மீண்டுமொரு இருண்டகாலம் ஊடகத்துறைக்கு ஏற்பட அனுமதிக்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார். அதனை அடுத்து  ஊடக அமைப்பு பிரதிநிதிகள் மிரட்டலில் ஈடுபட்ட நபர்கள் அவர்கள் பணியாற்றும் பொலிஸ் நிலையங்கள், தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட  விபரங்களை பிரதமரிடம் கையளித்தனர்.
அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை கண்காணிப்பகம் நாட்டில் இன்னமும் ஆட்கடத்தல் மற்றும் அச்சுறுத்தல் காணப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...