Designed by Iniyas LTD
சிறையிலுள்ள வைகோ-வுக்கு ஜூன் 2வரை காவல் நீட்டிப்பு
சிறையில் இருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு, ஜூன் 2ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் வைகோ ஏப்ரல் 4ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சரண் அடைவதாக தெரிவித்தார். வைகோவிடம் மாஜிஸ்திரேட் கோபிநாத், சொந்த ஜாமீனில் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து தன்னை சிறையில் அடைக்க உத்தரவிடும்படியும் கேட் டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து ஏப்ரல் 17-ம் தேதி வரை 15 நாட்கள் வைகோவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து வைகோ புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 17ம் தேதி ஆஜர் ஆனபோது, ஏப்ரல் 27ம் தேதி வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி.
இந்நிலையில் இன்று நீதிபதியின் விசாரணையில், வைகோவை ஜூன் 2ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.