தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீ.வி.வி – கூட்டமைப்பு பிரச்சனைக்கு விரைவில் தீர்வு

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில முக்கிய உறுப்பினர்களுக்கும் இடையிலான பிரச்சினை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.CV-sampanthan

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் மீளக் கையளிக்கப்படுதல், சம்பூர் அனல் மின்நிலைய விவகாரம், கட்சிக்குள் காணப்படுகின்ற பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இதற்கிடையில் வடமாகாண முதலமைச்சரிற்கும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாலை சேனாதிராஜா ஆகியோருக்கும் இடையில் ஏற்கனவே காணப்பட்ட கருத்து வேறுபாடுடன் கூடிய விரிசல் நிலை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக கொழும்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துவருவதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகின்றது என்பதை இரா. சம்பந்தனிடம் எடுத்துக்கூறியுள்ளதாக அறியமுடிகிறது. இந்த விடயத்தை குறித்த உறுப்பினர் தெரிவித்துக்கொண்டிருக்கையில், வடக்கு முதலமைச்சர் கடந்த பொதுத் தேர்தலின்போது சுயாதீனமாக செயற்பட்ட விடயம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து கூட்டமைப்பின் மற்றுமொரு எம்.பி விபரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு முதலமைச்சருடன் காணப்பட்ட கடந்தகால பிரச்சினைகள் தொடர்ந்தும் காணப்படுவதை ஏற்றுக்கொண்ட இரா. சம்பந்தன், இந்தப் பிரச்சினை மேலும் தொடராமலிருக்கும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Comments
Loading...