Designed by Iniyas LTD
சுகவீனம் உற்ற நிலையிலும் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வைகோ
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசைக் கண்டித்தும், காவிரி பாசனப் பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை வலியுறுத்தியும் 12–ந்தேதி தொடங்கி இன்று 22–ந்தேதி வரை தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்களிடையே வைகோ விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று நாகை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, உணவு ஒவ்வாமை காரணமாக வைகோவுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பிரச்சாரத்தின் ஊடே கட்சிக்காரர்களின் இல்லங்களில் சிறிது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டே பிரச்சாரம் செய்தார்.
இந்தச் சூழ்நிலையிலும் நேற்று (21–ந்தேதி) இரவு நாகபட்டினத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் வைகோ உரையாற்றினார்.
திருவாரூர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வைகோவுக்கு இன்று காலையில் உடல் சோர்வு ஏற்பட்டது. உடனே மருத்துவர்கள் வந்து அவரது உடல்நிலையை பரிசோதனை செய்தார்கள். ஆனாலும் வைகோ தன்னுடைய பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்வதற்காக இன்று காலையில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்.
இன்றுடன் காவிரி பாசனப் பகுதியில் பிரச்சாரத்தை முடிக்கும் வைகோ, 23–ந்தேதி காலை 10 மணியளவில் சென்னை – வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் நடைபெறும் நேதாஜி ஆவணங்களை வெளியிடக்கோரும் அறப்போர் ஆர்ப்பாட்டதில் பங்கேற்கிறார்.