Designed by Iniyas LTD
சுப்ரமணியசுவாமி-பீட்டா ராதாராஜன் மன்னிப்பு கேட்காவிட்டால் முற்றுகை!
ஒரு தேசிய இனத்தின் வாழ்வுரிமை மீட்பு கிளர்ச்சியானது எப்படி அறவழியில் நடைபெற வேண்டும் என்பதை தமிழினத்து மாணவர்களும் இளைஞர்களும் உலகத்துக்கே பாடம் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர்.ஒடுக்கப்பட்ட இனத்தின் மக்கள் ஒரு எல்லைவரைதான் பொறுமை காப்பார்கள்… பொங்கி எழுந்தால் அந்த உரிமை மீட்பு ஆழிப்பேரலையில் அரசாங்கங்களே நடுநடுங்கிப் போகும் என்பதை எம் இனத்து சகோதர, சகோதரிகள் நிரூபித்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டுப் பிள்ளைகள் நம் தேசிய இனத்தின் உரிமைக்காக வீதிக்கு வந்துவிட்டார்கள்… நாங்களும் உறுதுணையாக இருப்போம்; உங்களோடு கொட்டும் பனியிலும் மழையிலும் வாட்டும் குளிரும் எப்போதும்போல அரவணைப்போம் என தாய்மார்களும் புரட்சி களம் கண்ட மண்ணாக தமிழ் மண் திகழ்கிறது. உலகமே திரும்பிப் பார்க்கிறது! வன்முறை ஏதுமின்றி லட்சோப லட்சம் தமிழ் இளைஞர்கள் வீடுகளைத் துறந்து வீதிகளை மைதானங்களை போர்க்களங்களாக்கி போராடி வருகிற புரட்சியை வரலாறு கண்டது இல்லை..
அன்று சொட்டு நீரும் அருந்தாமல் தன்னுயிரை தற்கொடையாக்கி அகிம்சையின் உன்னதத்தை அறவழிப் போரின் தந்தையான காந்தியின் தேசத்தின் செவிகளில் அறைந்தார் எம் தமிழினத்தின் தியாகம் தீபம் திலீபன்!
இன்று லட்சக்கணக்கான தமிழினத்தின் இளைஞர் பெரும்படை ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழ் தேசிய இனத்தின் பண்பாட்டு அடையாளமான ஏறுதழுவதல் உரிமையை மீட்க கரம்கோர்த்து காந்தி தேசத்துக்கு மரண அடி கொடுத்திருக்கிறார்கள்!
தொடர்புடைய பதிவு
எங்கள் தேசத்து பண்பாட்டு புரட்சியாளர்களை கண்டு குலைநடுக்கத்தில் இருக்கிறது இந்திய வல்லாதிக்கம்; ஆனால் இந்திய பேரரசின் ஒடுக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் பிற தேசிய இனங்களோ தென்முனை வழிகாட்டி விட்டது; இப்படியும் போராடலாம் என ஆர்த்தெழுந்து ஆராவாரம் செய்கின்றன.
அதே நேரத்தில் தமிழ்த் தேசிய இனத்தின் எதிரி கும்பலைச் சேர்ந்த பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழர்களை பொறுக்கி எனவும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை எலிகள் எனவும் வாய்க்கொழுப்போடு ஏகடியம் பேசி வருகிறார். எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு கோழைத்தனமாக சமூக வலைதளங்களில் தமிழ் இனப் போராளிகளை பொறுக்கிகள் என விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமியால் இனி தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிட முடியாது.
தமிழினத்தின் சங்க காலங்கள் தொட்டே நடந்தேறி வரும் ஏறுதழுவுதல் எனும் பண்பாட்டு அடையாளத்தை ஒழித்துக் கட்ட கங்கணம் கட்டிக் கொண்டு காட்டுமிராண்டியைப் போல பேசி வருகின்றனர் பீட்டா நிர்வாகிகள். பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதாராஜன் என்ற பெண் இன விரோத வன்மத்துடன் தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாட்டு புரட்சியில் குதித்த பெரும்படையை ஆபாசமாக விமர்சித்திருக்கிறார்; இலவச உடலுறவுக்கு வரும் கூட்டத்தோடு ஒப்பிட்டு அநாகரிகமாக பேசியிருக்கிறார்.
சுப்பிரமணியன் சுவாமியும் ராதாராஜனும் தங்களது திமிரெடுத்த பேச்சுக்கு தமிழ் மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது!
சுப்பிரமணியன் சுவாமியும் ராதாராஜனும் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழ் மண்ணில் இருவரும் நடமாட முடியாது; இருவரது வீடுகளையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி முற்றுகையிட்டு போராடும் என எச்சரிக்கிறேன்!!