தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சூப்பர் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்திய பஞ்சாப்

ராஜஸ்தான் அணிக்கெதிரான பரபரப்பான இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 18வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

அகமதாபாத் சர்தார் படேல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான அஜின்கியா ரஹானே அரைசதம் கடந்து 74 ஓட்டங்களும், அணித்தலைவர் வாட்சன் 45 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் தீபக் ஹுடா 19 ஓட்டங்களும், கருண் நாயர் 25 ஓட்டங்களும், ஸ்டுவர்ட் பின்னி 12 ஓட்டங்களும் எடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்தது.

பந்துவீச்சில் பஞ்சாப் அணி சார்பில் அக்ஷர் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதனையடுத்து 192 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான முரளி விஜய் 21 ஓட்டங்களும், அணித்தலைவர் ஷேவாக் 1 ஓட்டமும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ஷான் மார்ஷ் அரைசதம் கடந்து  65 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 54 ஓட்டங்களும், ரித்திமான் சாகா 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.rr-vs-kxip-match

பரபரப்பாக சென்ற இப்போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுக்க போட்டி டை ஆனது.

படேல் 12 ஓட்டங்களுடனும், மிட்ஷெல் ஜான்சன் 13 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி 1 ஓவர் முடிவில் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இழந்தது.

அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியை 3 பந்தில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

இந்த ஐ.பி.எல் தொடரின் 3வது போட்டியில் ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த போட்டியில் வென்ற பஞ்சாப் அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டது.

சூப்பர் ஓவரில் கலக்கிய ஷான் மார்ஷ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Comments
Loading...