Designed by Iniyas LTD
செஞ்சோலை படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்
முல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான இலங்கை வான்படையின் குண்டுத்தக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 13 ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீது குண்டுத் தாத் தாக்குதலை நடத்தியது.
61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம் புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. போரால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ஆம் திகதி செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அப்போது தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
செஞ்சோலை சிறுவர் இல்ல மாணவிகள், முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் தற்காப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த இலங்கை அரச படைகள், 2006ஆம் ஆண்டு காலை 6 மணிக்கு இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் விமானங்களை அனுப்பி மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தின.
இதில் 61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன் 100இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் பலர் தற்போது சிறப்புத் தேவையுடையவர்களாக உள்ளனர். இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளின் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டோர் மீதே நடத்தப்பட்டது என இலங்கை அரசு அப்போது உலக நாடுகளுக்குத் தெரிவித்திருந்தது.

எனினும் மாணவிகள் தற்காப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே விமானத் தாக்குதல் நடப்பட்டது என பன்னாட்டுக் கண்காணிப்பாளர்களும் தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர்.