தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை சந்திக்கிறது

3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி., அட்லெடிகோ டீ கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி), கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., எப்.சி.புனே சிட்டி, மும்பை சிட்டி எப்.சி., எப்.சி.கோவா, டெல்லி டைனமோஸ் எப்.சி. ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.isl-football

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.  இந்த போட்டி தொடரில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை சந்திக்கிறது.  சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா கண்டது. அந்த ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்த சென்னை அணி கடைசி நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை எதிரணிக்கு அளிக்க நேர்ந்ததால் வெற்றியை கோட்டை விட்டது.

கடந்த ஆண்டில் சென்னை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த மென்டோஜா (கொலம்பியா), இலானோ (பிரேசில்) ஆகியோர் இந்த முறை அணியில் இடம் பெறவில்லை. அவர்கள் இல்லாத குறையை சென்னை அணி சொந்த மண்ணில் எப்படி சமாளிக்க போகிறது என்பது கேள்விக் குறியாகும்.  இருப்பினும் சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி (இத்தாலி) இந்த போட்டி தொடரில் அனுபவம் மிக்கவர். தொடர்ச்சியாக 3-வது முறையாக பயிற்சியாளர் பொறுப்பை வகிக்கும் அவர் அணியை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் தந்திரத்தை நன்கு அறிந்தவர்.

அவரது வழிநடத்தலில் சென்னை அணி வெற்றி கணக்கை தொடங்கும் என்று நம்பலாம்.  டெல்லி அணியை பொறுத்தமட்டில் புளோரன்ட் மலுடா (பிரான்ஸ்), சென்னை அணியில் இருந்து மாறிய புருனோ பெலிசாரி (பிரேசில்) தவிர குறிப்பிட்டு பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய வீரர்கள் கிடையாது. இருந்தாலும் அந்த அணியின் தடுப்பு ஆட்டம் சிறப்பு வாய்ந்தது. அதனை தகர்த்து முன்னேறுவது என்பது எளிதான விஷயம் அல்ல. டெல்லி அணியின் புதிய பயிற்சியாளராக ஜியான்லுகா ஜாம்பிரோடா இணைந்துள்ளார். 2006-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இத்தாலி அணியில் மெட்டராசியுடன் இவரும் இடம் பிடித்து இருந்தார். இந்த மோதலை இரண்டு இத்தாலியினருக்கு இடையிலான யுத்தம் எனலாம்.

இந்த போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் மெட்டராசி கருத்து தெரிவிக்கையில், ‘ஜாம்பிரோடாவை வீரராக எனக்கு தெரியும். ஆனால் பயிற்சியாளராக நான் பார்த்ததில்லை. இந்த போட்டி தொடரில் அவர் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பயிற்சியாளராக வளர அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். அவருக்கு எனது வாழ்த்துகள்.   நடப்பு சாம்பியன் என்பதால் எங்களுக்கு எந்தவித நெருக்கடியோ, தொல்லையோ கிடையாது. நான் வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க மாட்டேன். சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க எல்லா வகையிலும் போராடுவோம். இளம் வீரர்கள் பெனால்டியில் சிக்குவது இயல்பு தான். முந்தைய ஆட்ட தவறில் இருந்து பாடம் கற்று இருக்கிறோம். இனிமேல் அந்த தவறு நடக்காத வகையில் கவனமாக பார்த்து கொள்வோம்’ என்றார்.

டெல்லி அணியின் பயிற்சியாளர் ஜாம்பிரோடா கருத்து தெரிவிக்கையில், ‘இந்த போட்டி தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டங்களில் எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. எங்களது முதல் ஆட்டத்தில் வெற்றியை குறியாக கொண்டு செயல்படுவோம்’ என்று கூறினார்.  டெல்லி, சென்னை அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் டெல்லி அணி இரண்டு முறையும், சென்னை அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த போட்டி தொடரில் வெற்றி கணக்கை தொடங்க இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,2 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Comments
Loading...