Designed by Iniyas LTD
சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம்!
உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னை பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் நடைபெற்றது.
மேலும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொஹாமத் அக்லாக் என்பவர் வீட்டில் வைத்து மாட்டு இறைச்சியை சேமித்து வைத்து சாப்பிட்டதாக கூறி, அவரை வீட்டில் இருந்து வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று அவரை பலமாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த மொஹமத் பலியானார்.
இதனைக் கண்டித்து பாரதிய ஜனதா அலுவலகம் முன்பு மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் இளைய தலைமுறை கட்சி சார்பில் இன்று நடைபெற்றது. போராட்டத்தின் போது மாட்டு கறியையும், பிரியாணியையும் போராட்டக்காரர்கள் சாப்பிட்டனர். இப்போரட்டத்தில் தமிழர் விடியல் கட்சி, த.பெ.திக, மே 17 இயக்கம், தமிழ்நாடு மாணவர் இயக்கம், கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா ,மாற்றம் மாணவர் இளையோர் இயக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளைய தலைமுறை கட்சியின் முதன்மை செயலாளர் இனியன் ஜான் கூறியதாவது,
உத்தரபிரதேசத்தில் மாட்டுக் கறி சாப்பிட்டதற்காக இஸ்லாமியர் ஒருவர் இந்துத்துவா வெறியர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். உலகிலேயே மாட்டுக்கறி சாப்பிடதற்காக ஒருவர் அடித்து கொல்லப்பட்ட கொடுமை இந்தியாவை தவிர வேறு எங்கும் நடைபெற்றிருக்காது. இது எங்கள் உரிமை, எங்கள் உணவு. நாங்கள் சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்த படுகொலைக்கு காரணமான ஆர்.எஸ்.எஸ் இயக்ககத்தை தடை செய்ய வேண்டும் என்றார். மேலும், தாங்கள் சாப்பிடுவதற்காக கொண்டு கொண்டு வந்த மாட்டுக்கறியை போலீசார் கொண்டுச்சென்று விட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இப்போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.