Designed by Iniyas LTD
சேலத்தில் நக்சலைட்டைச் சேர்ந்த ஒருவர் கைது!
சேலம் அருகே உள்ளது பள்ளிக் கூடத்தானூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 35). இவர் கடந்த 2004 ம் ஆண்டு வீராணத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர். இவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அவர் நக்சலைட்டு இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.
இவர் மீது சேலம் டவுன் போலீஸ் நிலையம், தேனி மாவட்டம் பெரிய குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பழனிவேல் அவ்வப்போது, ஒரிசாவுக்கு சென்று அங்குள்ள நக்சலைட்டுகளை சந்தித்து வந்தார். இதை தொடர்ந்து ஒரிசா போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பழனிவேல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தது தெரியவந்தது. அவர் அடிக்கடி சேலம் மாவட்டம் மேட்டூருக்கும் பெயிண்டிங் வேலை சம்பந்தமாக வருவது வழக்கம்.
இதையறிந்த கியூபிரிவு போலீசார் நேற்று சாதாரண உடையில் மேட்டூர் முழுவதும் கண்காணித்து வந்தனர். நேற்று மாலை பழனிவேல் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று பழனி வேலை சுற்றி வளைத்தனர். போலீசாரைப் பார்த்ததும் அவர் தப்பி ஓட முயன்றார்.
போலீசார், பழனிவேலை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
கைதான பழனிவேல் மேட்டூர் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, அவரை 15 நாள் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கைதான பழனிவேல் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்