Designed by Iniyas LTD
துத்துக்குடி அருகே கோர விபத்து! 4 பேர் பலி
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த 12 பேர் ஒரு காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை சீனிவாசன் (42) என்பவர் ஓட்டிவந்தார். தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகில் உள்ள ஜெகவீரபாண்டியபுரம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதியது. மோதிய வேகத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் சென்னிமலையை சேர்ந்த கணேசன் (வயது 62), கார் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் விசித்ரா (15), கவிதா (38), சுகன்பிரியா, சண்முகவள்ளி, சத்யா, வசிகரன், முருகேசன், ஜெய்ஸ்ரீ, மோகன்ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த அனைவரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சண்முகவள்ளி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் வசிகரன் இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
விபத்து நடந்த இடத்தை விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம் பார்வையிட்டார். விபத்து குறித்து எப்போதும்வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.