Designed by Iniyas LTD
ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா – மஹிந்த
ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மூன்றாவது முறையாக போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்திடம் சட்ட விளக்கத்தை கோரியுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சம்பந்தமான உத்தியோகபூர்வ கோரிக்கை கடிதம் ஜனாதிபதியின் செயலகத்தினால் நேற்று மாலை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் ரகசியத்தை பேண உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேற்படி சட்ட விளக்கம் தொடர்பான விசாரணைகளை பிரதம நீதியரசரின் அலுவலக அறையில் எதிர்வரும் 10 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக இவ்வாறான தேசிய முக்கியத்துவமிக்க சட்ட விளக்க கோரல்கள் ரகசியமான முறையில் நடத்தப்படுவதில்லை. சிரேஷ்ட சட்டத்தரணிகளின் பங்கேற்போடு அரசியலமைப்புச் சட்டம் ஆராயப்படும்.
ஆனாலும் ஜனாதிபதியின் இந்த விளக்கம் கோரல் ரகசியமான முறையில் விவாதிக்கப்பட உள்ளது.இந்த சட்ட ஆய்வு அமர்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், ஈவா வனசுந்தர, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் பங்கேற்க உள்ளனர்.
இவர்கள் மூவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான நீதியரசர்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.அத்துடன் இவர்களில் பிரியந்த ஜயவர்தன அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார். இவரது சகோதரர் உயர்நீதிமன்றத்தில் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்றாது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் விளக்கங்களை முன்வைத்திருந்தனர்.
18 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடைகளுக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியும்.எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை ஒருவர் இரண்டு முறை மாத்திரமே வகிக்க முடியும் என்ற சட்டம் அமுலில் இருக்கும் போதே இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்றதால், அவர் மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக பதவியேற்ற ஜனாதிபதி, 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து விட்டு ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அந்த பதவியை வகிப்பது உட்பட பல திருத்தங்களுடன் 18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.