Designed by Iniyas LTD
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சண்டை – ராணுவ கேப்டன் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் ராணுவ கேப்டன் உயிரிழந்தார் என்று பாதுகாப்பு வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. 
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை இடையே பம்போர் என்னும் இடத்தில் துணை ராணுவத்தினர் நேற்று மாலை ஒரு பஸ்சில் சென்று கொண்டு இருந்தனர். அந்த பஸ் அங்குள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு கல்வி நிறுவன வளாகம் அருகே சென்றது. அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் சிலர் துணை ராணுவத்தினரை நோக்கி திடீரென எந்திர துப்பாக்கிகளால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதில் வீரர்கள் 12 பேர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகள் சுடத் தொடங்கியதை அடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் சிலர் வேகமாக ஓடிச்சென்று அங்கிருந்த தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்துக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டனர்.
அப்போது, அந்த கட்டிடத்துக்குள் 100 மாணவர்கள், 50 பயிற்சியாளர்கள் இருந்தனர். உடனடியாக, தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்த அத்தனைபேரையும் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். படுகாயம் அடைந்த ராணுவத்தினரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் வழியிலேயே 2 வீரர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ கேப்டன் உயிரிழந்தார் என்று பாதுகாப்பு வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து உள்ளனர். 4, 5 தீவிரவாதிகள் மறைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.