Designed by Iniyas LTD
ஜிசாட்-6 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது : இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்வெளித்துறையில் ஜிசாட் 6 செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி டி-6 ராக்கெட் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை சரியாக 4.52 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி டி-6 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டப்படி 18-வது நிமிடத்தில் ஜிசாட் 6 செயற்கைக்கோள் ராக்கெட்டில் இருந்து பிரிந்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தகவல் தொடர்பு, தட்பவெப்ப நிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு ஜிசாட் 6 செயற்கைக்கோள்கள் பயன்படும். முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கிரையோஜெனிக் என்ஜின் மூலம் ஜி.எஸ்.எல்.வி டி-6 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பதன் மூலம், இந்திய விண்வெளித் துறையின் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக, மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்எல்வி மாக் 3 ராக்கெட் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜி சாட் 6 செயற்கைக்கோளின் வெற்றி தனித்துவமானது என்று பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, ஜி சாட் 6 செயற்கைக் கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியிருப்பதன் மூலம், நமது விஞ்ஞானிகள் மீண்டும் ஒருமுறை மகத்தான சாதனை நிகழ்த்தியிருப்பதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.