Designed by Iniyas LTD
ஜேர்மனியைத் தோற்கடித்து போலந்து அணி வரலாறு படைத்துள்ளது
2016 யூரோ கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் ஜேர்மனியை வீழ்த்தி போலந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் முதன்முறையாக ஜேர்மனியைத் தோற்கடித்து போலந்து அணி வரலாறு படைத்துள்ளது.
போலந்து தலைநகர் வர்ஸாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. போலந்து அணிக்கு அர்கடியுஸ் மிலிக், செபாஸ்டியன் மிலா ஆகிய இருவரும் கோல் அடித்தனர். ஆனால், உலக சா்ம்பியனான ஜேர்மனி அணி கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
பிரேசிலில் நடைபெற்ற உலகக்கிண்ணத்துக்குப் பின் ஜேர்மனி பெரிதாக சாதிக்கவில்லை. நட்பு கால்பந்து ஆட்டத்தில் ஆர்ஜென்டினாவிடம் 4-2 என தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச நட்பு கால்பந்து ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 3வது நிமிடத்திலேயே கரீம் பென்ஸிமா கோல் அடிக்க, பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் போர்த்துக்கல் ஆக்ரோஷமாக ஆடியது. 51வது நிமிடத்தில் கார்னர் கிக்கை, போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி கோல் அடிக்க முயன்றார்.
ஆனால், பிரான்ஸ் கோல் கீப்பர் ஸ்டீவ் மேண்டன்டா அற்புதமாக டைவ் அடித்துத் தடுத்து விட்டார்.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் இடது புறத்தில் இருந்து போர்த்துக்கல் பின்கள வீரர்களை ஏமாற்றி பேட்ரிஸ் எவ்ரா அற்புதமாக கரீம் பென்ஸிமாவுக்கு பாஸ் கொடுத்தார்.
தன்னைச் சுற்றிலும் போர்த்துக்கல் வீரர்கள் சூழ்ந்ததை உணர்ந்த பென்ஸிமா அருகில் இருந்த போக்பாவிடம் பந்தை பாஸ் செய்ய, போக்பா அழகாக பந்தை வலைக்குள் செலுத்தினார். இதன்மூலம் பிரான்ஸ் 2-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிவதற்கு 15 நிமிடங்கள் இருந்தபோது ரொனால்டோ முழங்கால் காயம் காரணமாக வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் போக்பா, ஜாவோ மரியாவிடம் மோதலில் ஈடுபட போர்த்துக்கலுக்கு பெனால்டி கிக் கிடைத்தது.
அதை ரிச்சர்டோ குரேஸ்மா கோலாக மாற்றினார். இருப்பினும், முடிவில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரான்ஸ் ஏற்கெனவே, 2016 யூரோ கால்பந்து தொடருக்குத் தகுதி பெற்றது.
ஆனால், முதல் தகுதிச் சுற்று ஆட்டத்திலும் போர்த்துக்கல், அல்பேனியாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.