Designed by Iniyas LTD
ஜேர்மன் தமிழ் கல்விக்கழகத்தின் 26வது நிறைவு விழா!
தமிழ்க்கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா ஏப்பிரல் 2ம் திகதிமுதல் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகின்றது.
02.04.2016 சனிக்கிழமை வடமாநில தமிழாலயங்களை இணைத்து கனோவர் நகரிலும் 03.04.2016 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய தமிழாலயங்களை இணைத்து விற்றன் நகரிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழாலய நிர்வாகிகள் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர், பிரிவுசார் பொறுப்பாளர்கள், மாநிலச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்;. அத்துடன் சிறப்பு விருந்தினராக தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை மேலாளர் திருமதி ந. அரியரட்ணம் கலந்து கொண்டிருந்தார்.
மங்கல விளக்கேற்றலை தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மாணவர்களின் நடனங்கள், நாடகம், கவியரங்கம், உரை, கவிதை போன்றவை மிகவும் பாராட்டக்கூடியதாக அமைந்திருந்தது.
விழாவிற்கு சிகரம் வைத்தாற் போல் மதிப்பளிப்புகள் நடைபெற்றன.
5, 10, 15 வருட பூர்த்தி செய்த ஆசிரியருக்கானது
20 வருட பூர்த்தி செய்த தமிழ்வாரிதி (பட்டமளிப்பு)
25 வருட பூர்த்தி செய்த தமிழ்மாணி (பட்டமளிப்பு) ஆகியனவும்
சிறப்பாக நடைபெற்றது.
அத்துடன் 12ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கு சிறப்பான மதிப்பளிப்பும், யேர்மன் மட்டத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு மற்றும் தமிழ்த்திறன் யேர்மன் மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்படடது.
பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இவ் 26வது அகவை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவேறியது.
அடுத்து வரும் 09.04.2016 சனிக்கிழமை தென்மேற்கு தமிழாலயங்களை இணைத்து புட்லிங்கன் (Püttlingen) நகரிலும், 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை தென்மாநில தமிழலாயங்களை இணைத்து ஸ்ருற்காட்(Stuttgart) நகரிலும் 16.04.2016 சனிக்கிழமை மத்திய மாநில தமிழாலயங்களை இணைத்து Bergeim நகரிலும் தமிழ்க் கல்விக் கழகத்தின் 26வது அகவை நிறைவு விழா தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.
