தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

IPL இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சும் – டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன

9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் லயன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.  ipl

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழையும்.  இந்த நிலையில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்  கொல்கத்தா நைட் ரைடர்சும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன.  சரியான கலவையில் அமைந்துள்ள அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்சும் ஒன்று. 2012, 2014-ம் ஆண்டு சாம்பியனான கொல்கத்தா அணி கடந்த ஆண்டு கடைசி 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் ஜெயித்தால் போதும் என்ற நிலையில் இரண்டிலும் தோற்றதால் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்ட முடியாமல் போனது.

கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் குறிப்பிடும்படி சிறந்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த வகையில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் கவுதம் கம்பீருக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது.  யூசுப் பதான், ராபின் உத்தப்பா, மனிஷ் பாண்டே, ஆல்-ரவுண்டர்கள் ஷகிப் அல்-ஹசன், ஆந்த்ரே ரஸ்செல் மற்றும் சூர்யகுமார் யாதவ்,  காலின் முன்ரோ, மோர்னே மோர்கல், ‘சுழல் சூறாவளி’ சுனில் நரின், பியுஷ் சாவ்லா, உமேஷ் யாதவ் என்று திறமை வாய்ந்த வீரர்களுக்கு பஞ்சமில்லை.  அந்த அணியில் மொத்தம் 9 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆடும் லெவன் அணியில் 4 வெளிநாட்டு வீரரை மட்டுமே சேர்க்க முடியும் என்பதால் யாரை இறக்குவது என்ற குழம்பம் நிலவுகிறது. மற்றபடி சுழற்பந்து வீச்சாளர்களைத் தான் கொல்கத்தா அணி அதிகம் சார்ந்து இருக்கிறது.  தலைமை பயிற்சியாளராக காலிஸ் இருப்பதும் கூடுதல் பலமாகும்.

மேலும் கொல்கத்தா வீரர்கள் சொந்த ஊரில் எப்போதும் அபாரமாக ஆடக்கூடியவர்கள். புதிய சீசனை வெற்றியுடன் தொடங்குவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்கள்.  கடந்த சில ஆண்டுகளாக வீரர்கள், பயிற்சியாளர், கேப்டன்களை மாற்றி மாற்றி பார்த்தும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பலன் தான் கிட்டவில்லை. இந்த முறை இந்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் 37 வயதான ஜாகீர்கான் தலைமையில் களம் இறங்குகிறது.   ஆலோசகராக இந்திய முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இருப்பது அந்த அணிக்கு பலம் சேர்க்கும் என்று நம்பலாம். கடந்த சீசனில் ஆடிய வீரர்களில் 11 பேரை கழற்றி விட்ட டெல்லி அணி இளம் வீரர்களை குறி வைத்து எடுத்திருக்கிறது.

குயின்டான் டி காக், டுமினி, இம்ரான் தார், அமித் மிஸ்ரா, ஸ்ரேயாஸ் அய்யர், கிறிஸ் மோரிஸ், ரூ.8½ கோடிக்கு வாங்கப்பட்ட பவான் நெகி, ரிஷாப் பான்ட், கருண் நாயர், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் டெல்லி அணியின் நம்பிக்கை வீரர்களாக பளிச்சிடுகிறார்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாக 20 ஓவர் உலக கோப்பையின் ‘ஹீரோ’ வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கார்லஸ் பிராத்வெய்ட் அந்த அணியில் அங்கம் வகிப்பது கவனிக்கத்தக்கது. ஆல்-ரவுண்டரான பிராத்வெய்ட், கடந்த வாரம் இதே நாள்…இதே மைதானத்தில்….இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் கடைசி ஓவரில் தொடர்ந்து 4 சிக்சர்கள் விளாசி பிரமிப்பூட்டியதை மறந்து விட முடியாது. ரூ.4.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பிராத்வெய்ட் இந்த ஐ.பி.எல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

2013-ம் ஆண்டில் 13 தோல்வி, 2014-ம் ஆண்டில் 12 தோல்வி, 2015-ம் ஆண்டில் 8 தோல்வி என்று முதல் சுற்றை தாண்டாத டெல்லி அணி, புதிய கூட்டணியுடன் அடியெடுத்து வைப்பதால் முறையாவது மோசமான அனுபவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.  கொல்கத்தா அணிக்கு எல்லா வகையிலும் சவால் கொடுக்கும் அணியாக டெல்லி இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.  இவ்விரு அணிகளும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 15 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 9-ல் கொல்கத்தாவும், 6-ல் டெல்லியும் வெற்றி கண்டுள்ளன.  இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Comments
Loading...