Designed by Iniyas LTD
டி.எம் ஜயரட்னவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்
பிரதமர் டி.எம் ஜயரட்னவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது. ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய கொள்கலன் ஒன்றை விடுவிப்பதற்காக பிரதமர் அலுவலகத்திலிருந்து சுங்கப் பிரிவினருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட உள்ளது. தென் ஆசியாவில் ஒரே தடவையில் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்ட முதல் சந்தர்ப்பதாகக் கருதப்படுகின்றது.
பாராளுமன்றில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த யோசனையை தாம் முன்வைக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஏனைய அரசியல் கட்சிகளினதும் ஆதரவு பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் பதவியை இராஜினாமா செய்து சுயாதீன விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.