தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டி20 இறுதிநாள் விறுவிறுப்பான ஆட்டம்

6–வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. அரை இறுதியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இரு அணிகளும் 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.World-Twenty

2010–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. 2012–ம் உலக கோப்பையில் இலங்கையை தோற்கடித்து வெஸ்ட்இண்டீஸ் சாம்பியன் ஆனது. 2–வது முறையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் இரு அணிகளும் உள்ளன. இதில் வெல்லும் அணி 2–வது முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையை பெறும். வெஸ்ட் இண்டீஸ் அணி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை வென்றது.

குட்டி அணியான ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது. ஆனால் அரை இறுதியில் இந்தியாவை அதிரடியாக விளையாடி வீழ்த்தியது. இதனால் அந்த அணி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சம் இருக்காது. கிறிஸ்கெய்ல், சார்லஸ், சாமுவேல்ஸ், ரஸ்சல், டாரன் சமி, சிம்மன்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர். ரன் இலக்கு எவ்வளவாக இருந்தாலும் அதை எடுக்கக்கூடிய அணியாக திகழ்கிறது. மேலும் பந்து வீச்சிலும் சம பலத்துடன் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அதிரடியை சமாளிக்க இங்கிலாந்து முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

இங்கிலாந்து அணி லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோற்றது. இதற்கு பதிலடி கொடுக்க காத்து இருக்கிறது. மேலும் அந்த அணி 20 ஓவர் உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இல்லை. 4 முறையும் தோற்றது. அதை மாற்றி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது. அந்த அணியில் நேசன் ராய், ஹால்ஸ், ஜோ ரூட், பட்லர், ஸ்டோக்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் ஜோக்டன், புளுங்கெட், டேவிட் வில்லிடாப்லே போன்றோர் இருக்கிறார்கள்.

லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்து வீச்சை கிறிஸ் கெய்ல் விளாசி சதம் அடித்தார். இதனால் அவரை விரைவில் அவுட் ஆக்குவது இங்கிலாந்துக்கு முக்கியம். இருந்தபோதிலும் மொத்த அணியும் எங்களது இலக்கு என்று இங்கிலாந்து கேப்டன் மார்கன் கூறியுள்ளார். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...