Designed by Iniyas LTD
டெல்லியை சுருட்டிய கொல்கத்தா அணி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி டெல்லியை சுருட்டி வீசியது. 9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறிய 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின.
கொல்கத்தா அணியில் ஆச்சரியமான முடிவாக ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனுக்கு பதிலாக பிராட் ஹாக் சேர்க்கப்பட்டார். சுனில் நரின் இடம் பெறவில்லை. டெல்லி அணியில் டுமினி, இம்ரான் தாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் டெல்லியை பேட் செய்ய பணித்தார். இதன்படி மயங்க் அகர்வாலும், குயின்டான் டி காக்கும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கிய டெல்லி வீரர்கள் 2 ஓவர்களில் 23 ரன்களை சேகரித்தனர். அவர்களின் மகிழ்ச்சி இந்த இரண்டு ஓவர்கள் மட்டும் தான்.
அதன்பிறகு கொல்கத்தா பவுலர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. குயின்டான் டி காக் (17 ரன்), அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் (0) இருவருக்கும் ஒரே ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஆந்த்ரே ரஸ்செல் ‘செக்’ வைத்தார். தனது அடுத்த ஓவரில் மயங்க் அகர்வாலையும் (9 ரன்) வெளியேற்றினார். கருண் நாயரும் (3 ரன்) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதைத் தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களும், டெல்லி பேட்ஸ்மேன்களை மிரள வைத்தனர். ரூ.8½ கோடிக்கு விலை போன பவான் நெகி 11 ரன்களில் (19 பந்து, ஒரு சிக்சர்), சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கின் பந்து வீச்சில் ‘ஸ்டம்பிங்’ செய்யப்பட்டார். அந்த அணியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 20 ஓவர் உலக கோப்பை ‘ஹீரோ’ பிராத்வெய்ட்டும் ஏமாற்றம் அளித்தார்.
சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்தில் சிக்சர் அடித்த பிராத்வெய்ட் (6 ரன்) அதே ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அந்த அணியை தூக்கி நிறுத்தும் வகையில் எந்த பேட்ஸ்மேனின் ஆட்டமும் இல்லை. சொல்லப்போனால் யாரும் 20 ரன்களை கூட தாண்டவில்லை. கிறிஸ் மோரிஸ் 11 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 15 ரன்னிலும், அமித் மிஸ்ரா 3 ரன்னிலும், கேப்டன் ஜாகீர்கான் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். முடிவில் 17.4 ஓவர்களில் டெல்லி அணி 98 ரன்களுக்கு சுருண்டது. ஈடன்கார்டன் மைதானத்தில் ஒரு அணியின் குறைந்த பட்ச ஸ்கோர் இதுவாகும். கொல்கத்தா தரப்பில் ஆந்த்ரே ரஸ்செல், 45 வயதான பிராட் ஹாக் தலா 3 விக்கெட்டுகளும, ஹேஸ்டிங்ஸ், பியுஷ் சாவ்லா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து களம் இறங்கிய கொல்கத்தா அணி 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிக்கனியை பறித்தது. ராபின் உத்தப்பா 35 ரன்களில் (33 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். கேப்டன் கவுதம் கம்பீர் 38 ரன்களுடனும் (41 பந்து, 5 பவுண்டரி), மனிஷ் பாண்டே 15 ரன்களுடனும் (12 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.