Designed by Iniyas LTD
தஞ்சை பாறை எரிவாயு திட்ட விவகாரம்: நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
பாறை எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
தஞ்சையில் பாறை எரிவாயு எடுக்கும் விவகாரம் தொடர்பாக தென்னிந்திய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான வைகோ, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நாகப்பட்டினம் குத்தாலம் பகுதியில் பாறை எரிவாயு (ஷேல் கேஸ்) எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசு விண்ணப்பம் போட்டிருக்கிறது. அதே நேரத்தில், எண்ணெய் எடுக்கிறோம் என்ற பெயரில், ராட்சத ஹைட்ராலிக் இயந்திரங்களை வைத்து பூமியில் 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு துளைபோட்டு, கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீருடன் 634 நச்சு வேதிப் பொருள்களைச் சேர்த்து உள்ளே செலுத்தி பாறைகளை உடைக்கப் போகிறார்கள். இந்த நடைமுறையால் அந்தப் பகுதி விவசாய நிலங்கள் முழுவதும் நஞ்சு நிலங்களாக மாறி பாழாகிவிடும்.
இந்த நடைமுறையை பல நாடுகள் தடை செய்துவிட்டன. அமெரிக்காவில் பல மாகாணங்கள் இந்த நடைமுறைக்குத் தடை செய்துவிட்டன. இந்தத் திட்டம் தொடருமேயானால், தென்னிந்தியாவின் நெல் களஞ்சியமான தஞ்சை, பிச்சைப் பாத்திரமாக மாறிவிடும்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரச தனது கருத்தை முன்வைக்க வேண்டும். முன்பு மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு நிபுணர் குழு ஒன்றை அமைத்ததுபோல, இந்த பாறை எரிவாயு திட்டம் குறித்து ஆய்வு செய்யவும் நிபுணர் குழு ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என தீர்ப்பாயத்தில் வலியுறித்தினேன்.
அப்போது, தமிழக அரசு மூன்று வாரத்துக்குள் கருத்தைத் தெரிவிக்குமாறு நீதிபதி ஜோதிமணி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
எனவே, இந்த வழக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் அடுத்த விசராணைக்கு வருகிறபோது, பாறை எரிவாயுத் திட்டம் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைக்கப் போகிறோம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும் இந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.
ஒருதலைபட்சமாக செயல்படும் மத்திய அரசு:
கர்நாடகம் தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. மத்திய அரசும் காவிரி விவகாரத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தரவேண்டும். அதுபோல, மேக்கேதாட்டுவில் அணைக் கட்டப்படுவதையும் மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் விபரீதம் விளையும் என எச்சரிப்பதாக வைகோ கூறினார்.